ராகிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை அண்ணா பல்கலை எச்சரிக்கை
ராகிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை அண்ணா பல்கலை எச்சரிக்கை
UPDATED : ஆக 07, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் கிண்டி பொறியியல் கல்லூரி, ஏ.சி., டெக் பொறியியல் கல்லூரி, எஸ்.ஏ.பி., பொறியியல் கல்லூரி மற்றும் எம்.ஐ.டி., பொறியியல் கல்லூரியில் ஆகஸ்ட் 8ம் தேதி வகுப்புகள் துவங்குகின்றன.
‘கல்வி நிறுவனங்களில் ராகிங்கை தடுக்க வேண்டும்’ என்ற சுப்ரீம் கோர்ட் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவுகளைத் தொடர்ந்து, கல்வி நிறுவனங்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்க உள்ளதால், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும், ‘ராகிங்கில் ஈடுபடக்கூடாது என்றும், அவ்வாறு ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன், கல்வி நிறுவனத்திலிருந்தும் டிஸ்மிஸ் செய்யப்படுவர்’ என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறுகையில், “ராகிங்கை தடுக்க ஒவ்வொரு ஆண்டும் பேராசிரியர்கள் அடங்கிய கமிட்டி அமைக்கப்படுகிறது. இந்த ஆண்டும் இத்தகைய கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. வகுப்பறை மற்றும் கல்லூரி வளாகங்களில் அதிகளவில் ராகிங் நடைபெறுவதில்லை.
விடுதிகளில் தான் ராகிங் அதிகமாக இருக்கும். ராகிங் சம்பவங்களை தடுக்க, கல்லூரி டீன் மற்றும் ஹாஸ்டல் வார்டன்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வகுப்பறைகள் முடிந்தவுடன் மாலை நேரங்களிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்படும்.
ஹாஸ்டல்களில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தனி பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. சீனியர் மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளும் தீவிரமாக கண்காணிக்கப்படும்,” என்றார்.