UPDATED : ஆக 07, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
தேனி: உத்தமபாளையம் மாணவர் செல்வ கணேசன், சீனாவில் காமன்வெல்த் நாடுகள் சார்பில் நடக்கவுள்ள இளைஞர்கள் முகாமில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் எம்.ஏ., படிக்கும் மாணவர் செல்வ கணேசன். கல்லூரியில் படிக்கும் போது ‘பைன் ஆர்ட்ஸ்’ துறை மூலம் இவருக்கு கலை ஆர்வம் ஏற்பட்டது.
ஜன., 26ம் தேதி டில்லியில் நடந்த குடியரசு தின விழாவில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பாக நடந்த கலாசார கலை நிகழ்ச்சிகளில், தமிழகத்திலிருந்து பங்கேற்ற 23 மாணவ, மாணவிகளில் முதல் மாணவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதன்மூலம், இலங்கையில் நடைபெற்ற சார்க் நாடுகளின் 15வது மாநாடு சார்பாக நடந்த இளைஞர்கள் முகாமில், இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஆறு பேரில் செல்வ கணேசனும் ஒருவர்.
தமிழக, இந்திய கலாசாரம், பண்பாட்டு முறைகளை நாட்டுப்புறக் கலைகளான கரகம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம் ஆகியவை மூலமும், நாடகம் மூலமாகவும் வெளிப்படுத்தும் கலாசார நிகழ்ச்சிகளை செல்வ கணேசன் நடத்தினார்.
தற்போது சீனாவில் காமன்வெல்த் நாடுகள் சார்பில் செப்., மற்றும் அக்., மாதங்களில் நடைபெறவுள்ள இளைஞர்கள் முகாமில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.