‘வருவாய் கிடைக்காததால் பேஷன் டெக்னாலஜி படிப்பு நிறுத்தம்’
‘வருவாய் கிடைக்காததால் பேஷன் டெக்னாலஜி படிப்பு நிறுத்தம்’
UPDATED : ஆக 07, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: “ மாணவர்களிடம் இருந்து எதிர்பார்த்த வருவாய் கிடைக்காததால், பல கல்லூரிகளில் பேஷன் டெக்னாலஜி படிப்பு நிறுத்தப்பட்டுள்ளது,” என, பாரதியார் பல்கலை பேராசிரியர் பத்மநாபன் குற்றம் சாட்டினார்.
சவுத் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவன பட்டய சான்று வழங்கும் விழா மற்றும் 2008ம் ஆண்டு கல்வியாண்டு துவக்கவிழா, கோவை ராம்நகரில் உள்ள கமலம் துரைசாமி ஹாலில் நடந்தது.
இதில் கோவை பாரதியார் பல்கலை மாணவர் நலத்துறை பேராசிரியர் பத்மநாபன் பேசுகையில், “பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்கள் மற்றும் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் உள்ள பேஷன் டெக்னாலஜி துறைகளில் பல பேஷன் டிசைன்கள் இல்லை.
ஆனால், சவுத் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் அதிக டிசைன்கள் உள்ளன. இக்கல்வி நிறுவன மாணவர்கள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று, சிறந்த மாணவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.
பேஷன் டெக்னாலஜி , காஸ்ட்யூம் டிசைன் (ஆடை வடிவமைப்பு) படிப்புகளை துவக்கி லட்சக்கணக்கில் பணத்தை குவிக்க விரும்பிய பல கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகளவில் இல்லை.
மாணவர்களிடம் இருந்து எதிர்பார்த்த வருவாய் கிடைக்காததால் பேஷன் டெக்னாலஜி படிப்புக்களை பல கல்லூரிகள் நிறுத்தியுள்ளன. உயர்கல்வி மிகக்குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் ஏழை,எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களும் பயன் பெற முடியும்,” என்றார்.
தொடர்ந்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க செயற்குழு உறுப்பினர் வேலுசாமி, 40 மாணவ,மாணவியருக்கு பட்டய படிப்புக்கான சான்றிதழை வழங்கினார். இந்த விழாவில் சவுத் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவன இயக்குனர் உமாசங்கர், கல்வி நிறுவன தலைவர் லட்சுமி மீரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

