பயிற்சி டாக்டர்களுக்கு பணி நேரத்தை ஒழுங்குபடுத்த ஐகோர்ட் உத்தரவு
பயிற்சி டாக்டர்களுக்கு பணி நேரத்தை ஒழுங்குபடுத்த ஐகோர்ட் உத்தரவு
UPDATED : பிப் 18, 2011 12:00 AM
ADDED : பிப் 18, 2011 04:40 PM
சென்னை: ‘பயிற்சி டாக்டர்கள், முதுகலை பட்டம் படிக்கும் டாக்டர்களை தொடர்ந்து 24 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என நிர்ப்பந்திப்பதை பாராட்ட முடியாது’ என, சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ்., படிக்கும் டாக்டர் பிரதீப் பிரேம்குமார் தாக்கல் செய்த மனுவை, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ விசாரித்தது.
மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன், வக்கீல் எஸ்.சரவணன், அரசு சார்பில் சிறப்பு அரசு பிளீடர் சங்கரன், இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் வக்கீல் வி.பி.ராமன் ஆஜராகினர்.
‘முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு:
மருத்துவத்தில் முதுகலை படிப்பு படிப்பவர்கள், மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் குழுவுக்கு உதவ வேண்டும். நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டும். பயிற்சியின் நோக்கமே, படிப்பது மற்றும் பணியாற்றுவது. முதுகலை மாணவர்கள் அதிக நேரம் பணியாற்றும் போது, அவர்கள் களைப்படைகின்றனர். அதனால் சிகிச்சையில் தவறு ஏற்பட்டால், அது பொதுநலனுக்கு எதிராகி விடும்.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவில், பயிற்சி மாணவர்கள் 24 மணி நேரத்துக்கும் அதிகமாக பணியாற்றும் போது, சிகிச்சையில் தவறுகள் அதிகம் ஏற்படுகிறது என தெரிய வந்துள்ளது. எனவே, கவன சிதறலால் மருத்துவ சிகிச்சையில் தவறுகள் ஏற்படும் போது, பொதுமக்களின் உடல் நலத்துக்கு தான் பாதிப்பு ஏற்படும் என்பதை அரசு கவனத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் புதிதாக ஆராய வேண்டும்.
முதுநிலை மருத்துவப் படிப்பு படிப்பவர்கள், பயிற்சி டாக்டர்களை தொடர்ந்து 36 மணி நேரம் அல்லது 24 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என நிர்ப்பந்திப்பதை, எங்களால் பாராட்ட முடியாது. எனவே, வெளிநாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகளை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் நிலவும் சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமிக்க வேண்டும்.
இக்குழு ஆய்வின் முடிவில், மருத்துவ சிகிச்சையில் குறைபாடு, தவறுகள் இருப்பதாக தெரிய வந்தால், இப்பிரச்னையை அரசு மறுஆய்வு செய்ய வேண்டும். மருத்துவ முதுகலை படிப்புக்கான திட்டங்களை ஒழுங்குபடுத்த, புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும். வெளிநாடுகளில் பின்பற்றப்படும் திட்ட அட்டவணை போல் இங்கும் கொண்டு வரலாம். இவ்வாறு ‘முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட்டில் டாக்டர் பிரதீப் பிரேம்குமார் தாக்கல் செய்த மனு: மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்பில் சேரும் டாக்டர்கள், 24 மணி நேரமும் மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டியதுள்ளது. பணி நேரத்தை ஒழுங்குபடுத்த எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் எந்த வழிமுறையும் இல்லை. விடுமுறை, ஓய்வு நேரம் எங்களுக்கு கிடையாது.
கேரளாவில் முதுநிலை மாணவர்களுக்கு 20 நாட்கள் சாதாரண விடுமுறை, 15 நாட்கள் சிறப்பு விடுமுறை வழங்கப்படுகிறது. வாரம் ஒரு நாள் விடுமுறையும் வழங்கப்படுகிறது. எனவே, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., பல்கலையின் கீழ் வரும் கல்லூரிகளில் படிக்கும் முதுநிலை மாணவர்களுக்கு பணி நேரம், வார விடுமுறை, பேறுகால விடுமுறை உள்ளிட்ட விடுமுறைகளை நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
