ஆசிரியர் பயிற்சி மையங்களில் ஆங்கிலப் பயிற்சி ஆய்வகம்
ஆசிரியர் பயிற்சி மையங்களில் ஆங்கிலப் பயிற்சி ஆய்வகம்
UPDATED : ஆக 07, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவிகளின் ஆங்கில உச்சரிப்புத் திறனை மேம்படுத்த, ரூ. 2.75 லட்சம் செலவில் மொழிப் பயிற்சி மையங்கள் (லாங்குவேஜ் லேப்) அமைக்கப்பட உள்ளன.
அரசு ஆசிரியர் பயிற்சி மையங்களில், ஆங்கில உச்சரிப்புத் திறனை மேம்படுத்த ‘பொனிடிக்ஸ்’ பகுதி இருந்தாலும், செயல்பாட்டு முறையில் உச்சரிப்பை மேம்படுத்த பிரத்யேகமாக எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அரசு ஆசிரியர் பயிற்சி மையங்களில் ‘லாங்குவேஜ் லேப்’ நிறுவப்பட உள்ளது.
இது குறித்து கோவை அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி மையத்தின் முதல்வர் உன்னிகிருஷ்ணன் கூறியதாவது:
பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியரின் வார்த்தை உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும். ஆசிரியர் கற்றுத் தருவதை மாணவன் வாழ்நாள் முழுவதும் அப்படியே பின்பற்றுவது வழக்கமாக உள்ளது. ஆகவே, ஆசிரியர்களின் ஆங்கில உச்சரிப்பை சரியாக கற்றுத் தர வேண்டிய கடமை ஆசிரியர் பயிற்சி மையங்களுக்கு உள்ளது.
எனவே, தமிழகத்தில் 18 ஆசிரியர் பயிற்சி மையங்களில் மொழிப்பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு மையத்துக்கும் ரூ. 2.75 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மையங்களில் ஆங்கில வார்த்தைகளை ஏற்ற இறக்கங்களுடன் சரியாக உச்சரிப்பது, மாணவர்களுக்கு ஆங்கில வார்த்தைகளை எளிதாக கற்பிப்பது, ஆங்கிலத்தில் பிழையில்லாமல் பேசுவது எப்படி என்பது உள்ளிட்ட பல பயிற்சிகள் வழங்கப்படும்.
தரமான ஆங்கில கேசட்கள் வரவழைக்கப்பட்டு, ஒயர்லெஸ், மைக்ரோபோன் உபகரணங்களின் உதவியுடன் பயிற்சி வழங்கப்படும். ஒவ்வொரு பயிற்சிக் கட்டத்துக்குப் பிறகும் மாணவர்கள் ஆங்கில உச்சரிப்பை பதிவு செய்து குறைகளை திருத்திக் கொள்ள முடியும். ஆங்கில பயிற்சிக்கென வகுப்பில் தனி நேரம் ஒதுக்கப்படும்.
இவைமூலமாக, ஆசிரியர் பயிற்சி முடிக்கும் மாணவர்கள் நாளை வகுப்பறைகளில் தன்னம்பிக்கையுடன் ஆங்கிலத்தை கற்பிக்க முடியும். விரைவில் இதற்கான பணிகள் துவங்கவுள்ளன. இவ்வாறு, உன்னிகிருஷ்ணன் கூறினார்.
மொழிப் பயிற்சி மைய திட்டம், மொத்தம் 18 அரசு ஆசிரியர் பயிற்சி மையங்களில் துவங்கப்பட உள்ளது. இதில் கோவை அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி மையத்தைத் தவிர, மீதமுள்ள 17 மையங்களும் ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி ஆராய்ச்சி மையங்கள் (டயட்) என்பது குறிப்பிடத்தக்கது.

