UPDATED : பிப் 22, 2011 12:00 AM
ADDED : பிப் 22, 2011 02:05 PM
சென்னை: பள்ளி கல்வி இயக்குனர் பெருமாள்சாமி உட்பட ஐந்து பேர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி.,யில் காலியாக இருந்த ஐந்து உறுப்பினர் பதவிகளை நிரப்பி, தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பள்ளி கல்வி இயக்குனராக இருந்து வரும் பி.பெருமாள்சாமி, சென்னை விமான நிலைய பாதுகாப்பு பிரிவு உதவி கமிஷனராக இருந்து சமீபத்தில், சென்னை புறநகர் நுண்ணறிவுப் பிரிவு உதவிக் கமிஷனராக நியமிக்கப்பட்ட டி.குப்புசாமி, கோவையில் போலீஸ் கூடுதல் எஸ்.பி.,யாக இருந்து தற்போது எஸ்.பி.,யாக பணியாற்றி வரும் ரத்தினசபாபதி ஆகியோரும், திருச்சி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்த பன்னீர்செல்வம் மற்றும் ஜி.செல்வமணி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பதவியேற்கும் நாளில் இருந்து, ஆறு ஆண்டுகள் அல்லது 62 வயதை அடையும் வரை, எது முதலில் வருகிறதோ, அதுவரை பதவியில் நீடிப்பர். ஐந்து பேரும், நாளை பதவியேற்றுக் கொள்வர் என தெரிகிறது.
