‘கல்லூரி வளாகத்தில் புகையிலை பயன்படுத்துவோர் சஸ்பெண்ட்’
‘கல்லூரி வளாகத்தில் புகையிலை பயன்படுத்துவோர் சஸ்பெண்ட்’
UPDATED : பிப் 24, 2011 12:00 AM
ADDED : பிப் 24, 2011 12:49 PM
சென்னை: “மருத்துவக் கல்லூரி வளாகங்களில், புகையிலை பொருட்கள் பயன்படுத்துவோர், சஸ்பெண்ட் செய்யப்படுவர்,” என, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் பேசினார்.
கடந்த 2003ம் ஆண்டு, புகையிலை தடுப்புச் சட்டம், இந்தியா முழுவதும் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் படி, பொது இடங்களில் புகைபிடிப்போருக்கு, 200 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
கல்வி நிறுவனங்களின் எல்லையிலிருந்து, 100 மீட்டர் தொலைவிற்கு புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்கள் விற்பது தண்டனைக்குரிய செயல். 18 வயதிற்குட்டோர் புகையிலை பொருட்களை வாங்குவதோ, விற்பதோ தண்டனைக்குரிய குற்றம்.
புகையிலை தடுப்புச் சட்டத்தின் இப்பிரிவுகளை, மருத்துவக் கல்வி நிறுவனங்களில் நடைமுறைப்படுத்துவது குறித்த கருத்தரங்கம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை சார்பில், அடையாறு புற்றுநோய் மையத்தில் நேற்று நடந்தது.
கருத்தரங்கை துவக்கிவைத்து, மருத்துவ பல்கலை துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் பேசியதாவது:
புகையிலை தடுப்புச் சட்டம், மருத்துவக் கல்வி நிறுவனங்களில் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. எங்கள் பல்கலையின் கீழ் செயல்படும், 350 மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில், இச்சட்டத்தை செயல்படுத்த ஆவன செய்யப்படும். மருத்துவக் கல்லூரி வளாகங்களில் சிகரெட், பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்தும் மாணவர்கள் மற்றும் ஊழியர்களை, ‘சஸ்பெண்ட்’ செய்யவும், நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு மயில்வாகனன் நடராஜன் கூறினார்.
அடையாறு புற்றுநோய் மைய இயக்குனர் சாகர் பேசும்போது, “இந்தியாவில் சராசரியாக, 20 கோடி பேருக்கு புகையிலை பழக்கம் உள்ளது. இவர்களில், 13 முதல் 15 வயதிற்குட்பட்டோர், 17 சதவீதம் பேர். புற்றுநோய்களில், 40 சதவீதம் புகையிலை பயன்படுத்துவதால் உண்டாகிறது. புகையிலையின் தீமையை, 10 முதல் 12 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு, ஆசிரியர்களும், பெற்றோரும் எடுத்துரைக்க வேண்டும்,” என்றார்.
கருத்தரங்கில், அடையாறு புற்றுநோய் மையத்தின் தலைவர் சாந்தா, தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டு மைய ஆலோசகர் பிரசன்னா கண்ணன், ஸ்டான்லி, அரசு சித்தா, யுனானி உள்ளிட்ட, 54 மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
