துறை தலைவர் நியமனத்தில் அரசு உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடி
துறை தலைவர் நியமனத்தில் அரசு உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடி
UPDATED : பிப் 24, 2011 12:00 AM
ADDED : பிப் 24, 2011 05:28 PM
மதுரை: கல்லூரிகளில் துறை தலைவர் நியமனம் குறித்து அரசு உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் அப்பீல் மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி செயலாளர் தாக்கல் செய்த ரிட் அப்பீல் மனு: கல்லூரி 1844ல் துவங்கப்பட்டது. தன்னாட்சி அந்தஸ்து பெற்றது. 1988 டிச.,5ல் அரசு பிறப்பித்த உத்தரவில், அரசு உதவி பெறும் அனைத்து கல்லூரிகளிலும், ஒவ்வொரு துறையிலும் பணிபுரியும் மூத்தவர்கள், பிஎச்.டி., பெறாத பட்சத்திலும், துறை தலைவர்களாக நியமிக்கலாம், என குறிப்பிட்டது. அவர்களுக்கு எந்த சிறப்பு சம்பள படியும் கிடையாது என தெரிவித்தது. இது சிறுபான்மையின கல்லூரிகளின் உரிமையில் தலையிடுவதாகும். இதை எதிர்த்து தாக்கல் செய்த ரிட் மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். அதை ரத்து செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.
மனு நீதிபதிகள் என். பால் வசந்தகுமார், ஆர்.சுப்பையா பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. கல்லூரி தரப்பில் ஆஜரான வக்கீல், “அரசு உத்தரவு கல்லூரியில் உள்நிர்வாகத்தில் தலையீடுவதாகும். கல்லூரி நிர்வாகம், யாரை பொருத்தமானவராக கருதுகிறதோ, அவர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும்,” என்றார்.
மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், துறை தலைவர்களை ஒழுங்குப்படுத்தும் நோக்கத்தில் அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் சிறுபான்மையினர் கல்லூரி என்ற பேச்சுக்கு இடமில்லை. சிறுபான்மையினர் கல்லூரிகளில் முதல்வர் பதவி வேண்டுமானால், நிர்வாகம் தொடர்புடையதாக இருக்கலாம். துறை தலைவர் பதவி அப்படியில்லை, என தெரிவித்தது.
