ஏ.ஐ.சி.டி.இ., விதிமுறைகளுக்கு இடைக்காலத் தடை: ஐகோர்ட்
ஏ.ஐ.சி.டி.இ., விதிமுறைகளுக்கு இடைக்காலத் தடை: ஐகோர்ட்
UPDATED : பிப் 25, 2011 12:00 AM
ADDED : பிப் 25, 2011 11:38 AM
ஐகோர்ட்டில், அரசு உதவி பெறாத பாலிடெக்னிக் நிர்வாக சங்கம் தாக்கல் செய்த மனு: புதிய வழிமுறைகளை வகுத்து, கடந்த டிசம்பர் மாதம் ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவு பிறப்பித்துள்ளது. தொழிற் கல்விக்கு ஒப்புதல் வழங்குவதற்கான நடைமுறை குறித்த கையேட்டை, ஏ.ஐ.சி.டி.இ., சமீபத்தில் வெளியிட்டது. கல்லூரிகளுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு, விண்ணப்பங்களை, ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், கட்-ஆப் தேதி வரும் 28ம் தேதி என்றும் கூறப்பட்டுள்ளது.
புதிய வழிமுறைகள், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு பொருந்தும். புதிய வழிமுறைகள் கடுமையாக உள்ளன. எங்கள் தரப்பு கருத்துக்களை தெரிவிக்க, சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. இந்த கல்வியாண்டு முதல் புதிய வழிமுறைகள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஏ.ஐ.சி.டி.இ., பிறப்பித்துள்ள நிபந்தனைகள், வழிமுறைகளை பூர்த்தி செய்ய, போதிய கால அவகாசம் தரப்படவில்லை.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பொறியியல் பட்டம் அல்லது அதற்கு இணையாக ஏ.ஐ.எம்.இ., பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றும் பொறியியல் கல்லூரிகளின் ஆசிரியர்கள், எம்.இ., அல்லது எம்.டெக்., மற்றும் போதிய அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
இது போன்று பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகளை நடைமுறைப்படுத்த முடியாது. சரியாக பரிசீலிக்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களிடம் இருந்து கருத்துக்களை கோராமல், இந்த நிபந்தனைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏ.ஐ.சி.டி.இ.,யின் புதிய வழிமுறைகள் தொடர்பான நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதி ஜோதிமணி விசாரித்தார். ஏ.ஐ.சி.டி.இ.,யின் புதிய வழிமுறைகளை, தற்போது இயங்கி வரும் பாலிடெக்னிக்குகளுக்கு அமல்படுத்த, இடைக்காலத் தடை விதித்தார். விசாரணையை எட்டு வாரங்களுக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
