UPDATED : பிப் 25, 2011 12:00 AM
ADDED : பிப் 25, 2011 12:23 PM
சென்னை: தேர்தலில் பங்கேற்பது குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் கல்லூரி, பல்கலை மாணவர்கள், ஆசிரியர்களை ஈடுபடுத்துமாறு, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து உயர் கல்வித்துறை முதன்மை செயலர் கணேசன், தொழில் நுட்பக் கல்வி கமிஷனர், கல்லூரிக் கல்வி இயக்குனர் மற்றும் தமிழக பல்கலைக் கழகங்களின் பதிவாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தலைமைச் செயலகத்தில் 8ம் தேதி, இந்திய தேர்தல் கமிஷனர் இயக்குனர் ஜெனரல் அக்ஷய் ராட் தலைமையில், தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதில் பேசிய அக்ஷய் ராட், ஓட்டுப் போடும் பணியில் அதிகளவிலான வாக்காளர்களை பங்கேற்க வைப்பதற்கான விழிப்புணர்வு பணியில், மாநில அரசுத் துறைகளின் பங்கு குறித்து எடுத்துரைத்தார்.தேர்தலில் பங்கேற்பது குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில், உங்களையும், உங்களது கட்டுப்பாட்டில் செயல்படும் ஆசிரியர்கள், மாணவர்களையும் உடனடியாக ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலில் பங்கேற்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கும் கூட்டங்களை பல்கலை, கல்லூரிகளில் நடத்த வேண்டும்.
முக்கிய வீதிகளிலும், நகரங்கள், கிராமங்களிலும் தேர்தலில் பங்கேற்பதன் அவசியத்தை வலியுறுத்தும் கோஷங்களை எழுப்பிக் கொண்டு ஊர்வலம் செல்ல வேண்டும். தேர்தலில் பங்கேற்பதன் அவசியத்தை கூறும், ‘வாக்கியத்தை’ உருவாக்க மாணவர்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.
தேர்வுகள் துவங்குவதற்கு முன் மார்ச் மாதத்திற்குள் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தேர்தலில் பங்கேற்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த தெரு நாடகங்கள் உள்ளிட்ட பிற முறைகளும் பயன்படுத்தப்படலாம்.இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, பொதுத் (தேர்தல்) துறைக்கும், உயர் கல்வித் துறைக்கும் தகவல் அளிக்க வேண்டும். ‘அதிக முக்கியத்துவம்’ வழங்கி, இப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கணேசன் கூறியுள்ளார்.
