தாசில்தார் ஆலுவலகத்தில் இழுத்தடிப்பு; மாணவர்கள் கண்ணீர்
தாசில்தார் ஆலுவலகத்தில் இழுத்தடிப்பு; மாணவர்கள் கண்ணீர்
UPDATED : ஆக 08, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
நாகப்பட்டினம்: மாணவ, மாணவிகள் அரசின் பல்வேறு உதவித்தொகைக்காக, சான்றிதழ்கள் வேண்டி, தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று அலையும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது.
புரோக்கர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் மட்டுமே சான்றிதழ்கள் உடனுக்குடன் கிடைப்பதாக கூறுகின்றனர்.
மாணவர்கள் அரசு மூலம் கிடைக்கும் கல்விச் சலுகைகளை பெறுவதற்கு, ஜாதி, வருவாய் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன. இச்சான்றிதழ்களை இலவசமாக உடனுக்குடன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
நாகை தாசில்தார் அலுவலகத்தில் சான்றிதழ்கள் கேட்டு வரும் மாணவர்களையும், பெற்றோர்களையும் தாசில்தார் அலுவலக ஊழியர்கள், அலுவலகத்தின் எதிரில் உள்ள ஜெராக்ஸ் கடையில் விண்ணப்பங்களை வாங்கி வருமாறு கூறுகின்றனர்.
விண்ணப்பங்களை வாங்கி வரும் மாணவர்கள் வி.ஏ.ஓ., மற்றும் ஆர்.ஐ., ஆகியோரிடம் தலைகீழாக நின்று கையெழுத்து வாங்கி வந்தாலும், தாசில்தார் அலுவலக வாசலில் நிற்கும், புரோக்கர்கள் மூலம் சென்றால் மட்டுமே கேட்கப்படும் சான்றிதழ்கள் கிடைக்கின்றன.
நேரிடையாக வரும் மாணவர்களின் விண்ணப்பங்களை, அங்குள்ள பெட்டியில் போடச் சொல்லும் ஊழியர்கள், ஒரு வார காலத்திற்கு அலையவிட்டபின், குறிப்பிட்ட தொகை கைமாறிய பிறகே, சான்றிதழ்களை வழங்குகின்றனர். ஏழை மாணவ, மாணவிகள் லஞ்சம் கொடுக்க இயலாமல் கண்ணீர் விடுகின்றனர்.

