மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலை அடிக்கல் நாட்டுவிழா
மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலை அடிக்கல் நாட்டுவிழா
UPDATED : பிப் 26, 2011 12:00 AM
ADDED : பிப் 26, 2011 04:15 PM
மதுரை: மதுரையில் அண்ணா தொழில்நுட்ப பல்கலையின் அடிக்கல் நாட்டுவிழா நாளை (பிப். 27ம் தேதி) நடக்கிறது.
மதுரையில் கடந்த ஆண்டு ஜூனில், அண்ணா தொழில்நுட்ப பல்கலை துவங்கியது. 41 இணைப்பு கல்லூரிகளைச் சேர்ந்த, 13 ஆயிரத்து 968 மாணவர்கள் இதில் படிக்கின்றனர். புதிய இப்பல்கலைக்கு, மதுரை கொடிக்குளத்தில், 83 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் புதிய கட்டடம் கட்டும் பணி விரைவில் துவங்க உள்ளது.
பல்கலையின் துணைவேந்தர் ஆர்.முருகேசன் நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கு கட்டடங்கள் கட்டுவதற்கு, 150 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டு, முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, அழகர்கோவில் ரோட்டில் உள்ள மதுரை காமராஜ் பல்கலையின் பழைய கட்டட வளாகத்தில் நடைபெறும். மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அடிக்கல் நாட்டுகிறார்.
இதையொட்டி கல்லூரி முதல்வர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அத்துடன் அண்ணா தொழில்நுட்ப பல்கலையுடன், கம்ப்யூட்டர் பயிற்சி அளிப்பது தொடர்பாக இனிக்ஸ் டெக்னாலஜி என்ற நிறுவனம் இணைந்து ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்துடன் இணைந்து, முதுகலை மாணவர்களுக்கான கருத்தரங்கு ஒன்றும் நடத்தப்பட உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க உள்ள இக்கருத்தரங்கில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், ஐ.ஓ.பி., சேர்மன் நரேந்திரா உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
பல்கலையில் புதிய படிப்புகளை பொறுத்தவரை, இந்த ஆண்டு, ஆறு படிப்புகள் நடக்கின்றன. அடுத்த ஆண்டு, முதுகலையில் ஆறு படிப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும். பல்கலையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரம்பிய நிலையில், அடுத்த கட்டமாக, அலுவலர்கள் பணியிடமும் ஒருசில நாட்களில் நிரப்பப்படும்.இவ்வாறு முருகேசன் கூறினார்.பல்கலை பதிவாளர், ஈ.பி., பெருமாள் பிள்ளை, இயக்குனர், மாலதி உடனிருந்தனர்.
