சி.சி.இ. முறையால் நன்மை மட்டுமே: சி.பி.எஸ்.இ. தலைவர்
சி.சி.இ. முறையால் நன்மை மட்டுமே: சி.பி.எஸ்.இ. தலைவர்
UPDATED : பிப் 27, 2011 12:00 AM
ADDED : பிப் 27, 2011 05:47 PM
சென்னை ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ஆர்.எம்.கே. பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய வினீத் ஜோஷி இவ்வாறு கூறினார். மேலும் அவர் தனது உரையில் கூறியதாவது, "இந்த பசுமையான கல்லூரி வளாகம் எனது மாணவர் பருவ மலரும் நினைவுகளுக்கு இட்டு செல்கிறது. படிப்பில் அதிக மதிப்பெண்கள் எடுப்பது மட்டுமே முக்கியமல்ல. பாடங்களை தெளிவாகவும், ஆழமாகவும் புரிந்துகொள்வதே முதல் முக்கியம்.
தற்போதுள்ள இந்திய கல்விமுறையானது நாட்டிற்கு பெருமையையும், வளர்ச்சியையும் அளித்தாலும், அதில் இன்னும் சில மாற்றங்களை செய்து மேம்படுத்த வேண்டியுள்ளது. இதை கருத்தில் கொண்டுதான் சி.பி.எஸ்.இ. கல்வி திட்டத்தில் சி.சி.இ.(கண்டிநியூயஸ் அண்ட் காம்ப்ரிகென்சிவ் எவாலுவேஷன்) என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் படிப்பிற்கு மட்டுமின்றி, மாணவர்களின் பிற திறன்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தேர்வுமுறை அமைகிறது. மேலும் ஆசிரியர்களும், மாணவர்களின் முன்னேற்றத்தில் அதிகளவில் பங்காற்றும் ஆரோக்கியமான நிலைமை ஏற்படுகிறது. ஆனால் இந்த சி.சி.இ. முறையைப் பற்றி சிலர் சரியாக புரிந்துகொள்ளாமல் அதை தவறானது என்று குற்றம் சுமத்துகின்றனர். அந்த முறையின் மூலம் மாணவர் திறன்களை சரியாக பரிசோதிக்க முடியாது என்றும் கூறுகின்றனர். ஆனால் அந்த எண்ணம் தவறானது என்பதை அவர்கள் உணர வேண்டும்.
உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால், டெல்லி பகுதியை சேர்ந்த ஆசிரியர்கள் தயாரிக்கும் கேள்வித்தாளை சென்னை பகுதி மாணவர்கள் எதிர்கொள்ளும்போது சிரமமாக உணர்கின்றனர். ஏனெனில் ஒவ்வொரு பகுதிக்கும் கற்றல் முறையிலும், ஆசிரியர் கற்பிக்கும் முறையிலும் வித்தியாசம் உள்ளது. எனவே அந்தந்த பகுதி தேர்வுகளுக்கு சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த ஆசிரியர்களே தங்கள் மாணவர்களின் திறன் மற்றும் சாமர்த்தியத்தை புரிந்துகொண்டு அதற்கேற்ப வினாத்தாள் தயாரிப்பார்கள்.
மேலும் இந்த புதிய முறையின் மூலம் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு அதிகரித்து, மாணவர் மேம்பாட்டில் ஆசிரியர்களின் பங்கு அதிகரிக்கும்" என்றார்.
விழாவிற்கு ஆர்.எம்.கே. கல்வி குழுமத் தலைவர் முனி ரத்னம் தலைமை தாங்க, விழா வரவேற்புரையை ஆர்.எம்.கே. குழும பள்ளிகளின் மூத்த முதல்வர் சதீஷ் நிகழ்த்தினார். பள்ளி ஆண்டறிக்கையை பள்ளி முதல்வர் ஜமுனா ராணி வாசித்தார்.
சி.பி.எஸ்.இ. சேர்மன் வினீத் ஜோஷி, விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார். இந்த விழாவில் பல கல்வியாளர்களும், இதர பள்ளி மாணவ-மாணவியரும் தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். மாணவ-மாணவியரின் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் பள்ளி தலைவர் லகானி நன்றியுரை ஆற்றினார்.
