உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தர ஊதியம் உயர்வு
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தர ஊதியம் உயர்வு
UPDATED : பிப் 28, 2011 12:00 AM
ADDED : பிப் 28, 2011 12:53 PM
மதுரை: உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தர ஊதியத்தில் 200 ரூபாய் அதிகரித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, நான்காவது சம்பள கமிஷனில் முதுகலை ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1,820 ரூபாய், உயர்நிலை தலைமை ஆசிரியர்களுக்கு 2,000 ரூபாய் வழங்கப்பட்டது. அடுத்து 5வது சம்பள கமிஷனில் இருதரப்பினருக்கும் ஒன்றாகி,6,500 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டு சமப்படுத்தப்பட்டனர். இதனால், தலைமை ஆசிரியர்கள் தங்கள் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என கேட்டு போராட்டம் நடத்தினர். எனவே, தலைமை ஆசிரியர்களுக்கு மட்டும் 500 ரூபாய் தனி ஊதியமாக தரப்பட்டது.
மேலும், அடுத்த சம்பள கமிஷனில் குறைபாடு களையப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆறாவது சம்பள கமிஷனில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் மீண்டும் சம்பளத்தில் வேறுபடுத்தப்பட்டனர். இருவருக்கும் தரச் சம்பளமாக முதுகலை ஆசிரியருக்கு 4,800, உயர்நிலை தலைமை ஆசிரியர்களுக்கு 4,600 என அறிவிக்கப்பட்டது. இதனால், தலைமை ஆசிரியர்கள் மீண்டும் வேதனைப்பட்டனர்.
மத்திய அரசில் தர ஊதியமாக 5,400 தருகின்றனர். அதைத் தரவேண்டும் என, போராடினர். இந்நிலையில், தமிழக அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் தர ஊதியத்தில் 200 ரூபாய் அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. (அரசாணை எண்- 58. நாள்: 25-02-2011). 1.1.2011 முதல் இதற்கான பணப்பயனை பெறலாம் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில பொதுசெயலர் சாமிசத்தியமூர்த்தி, மாவட்ட செயலர் எஸ்.பாஸ்கரன் கூறுகையில், ‘தலைமை ஆசிரியரின் கோரிக்கையை நிறைவேற்றிய அரசுக்கு நன்றி. அதே சமயம் விரைவில் புதிதாக அமையும் அரசு சம்பள வேறுபாடுகளை களைந்து, மத்திய அரசுக்கு இணையான சம்பளம் தரவேண்டும்’ என்றார்.
