பொது தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் விரைவில் தயாரிப்பு
பொது தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் விரைவில் தயாரிப்பு
UPDATED : ஆக 08, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரலில் பொதுத்தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளின் பெயர், பள்ளி குறித்த புள்ளி விவரங்கள் எடுக்கும் பணியை, அரசு தேர்வுத் துறை விரைவில் துவக்க உள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் குறித்த பட்டியல் எடுக்கும் பணி, வழக்கமாக பொதுத்தேர்வு நெருக்கத்தில் எடுக்கப்படும். ஆனால், சில தனியார் பள்ளிகள் முறைகேடான வகையில், கால தாமதமாக சேர்க்கப்படும் மாணவர்களின் பெயர்களையும் கடைசி நேரத்தில் பட்டியலில் சேர்ப்பது சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும், காலாண்டுத் தேர்வுக்கு முன்னதாகவே பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது.
பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், பிளஸ் 1 வகுப்பில் சேர்வதற்கு இம்மாதம் இறுதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இம்மாத இறுதியில் இருந்து பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் பெயர்ப் பட்டியல் எடுக்கும் பணி நடைபெறும் என தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முதற்கட்டமாக எடுக்கப்படும் பட்டியல், அரையாண்டுத் தேர்வுக்குப் பிறகும் பின்னர் பொதுத் தேர்வுக்கு முன்னதாக ஒரு முறையும் சரிபார்க்கப்படும். தேர்வெழுதும் மாணவர்களின் விவரங்கள் டிசம்பர் மாதத்தில் இறுதி செய்யப்படும். 
கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வை ஐந்து லட்சத்து 95 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினர். வரும் ஆண்டில் 40 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக எழுதுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் பத்தாம் வகுப்பு  பொதுத் தேர்வை எட்டு லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த எண்ணிக்கை ஒன்பது லட்சம் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்முறைத் தேர்வில் மாற்றமா?: தற்போது செய்முறைத் தேர்வுகள், எழுத்துத் தேர்வுக்கு முன்னதாக நடத்தப்படுகின்றன. பிப்ரவரி மாதத்தில் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த முறையின் காரணமாக செய்முறைத் தேர்வு முடிந்ததும், தொடர்ந்து பள்ளிக்கு வருவதில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. எழுத்துத் தேர்வுக்கு தயாராவதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுகின்றனர். இதனால், பொதுத்தேர்வு நெருக்கத்தில், தேர்வு தொடர்பான அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்க முடியாத நிலை ஆசிரியர்களுக்கு ஏற்படுகிறது.
இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கு, எழுத்துத் தேர்வுக்குப் பிறகு செய்முறைத் தேர்வை நடத்தலாம் என்ற கருத்து இரண்டு, மூன்று ஆண்டுகளாக இருந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் பொதுத் தேர்வுக்கு முன்னதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும், இந்தக் கருத்து குறித்து விவாதிக்கப் பட்டது. ஆனால், எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், வரும் ஆண்டில் நடைபெறும் பொதுத்தேர்வில் எழுத்துத் தேர்வுக்குப் பிறகு செய்முறைத் தேர்வை நடத்துவதற்கு தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, ஜனவரிக்குப் பிறகே வெளிவரும்.

