UPDATED : மார் 01, 2011 12:00 AM
ADDED : மார் 01, 2011 12:29 PM
குறிப்பிட்ட ஒரு துறையின் அதிகார மையத்தை செயல்படுத்தும் அமைப்பில் உள்ளவர்கள் செயலக பணியாளர்கள் என்று அழைக்கப்படுவர். நிர்வாக இயக்குனர், தலைவர் ஆகியோரின் இயல்பான பணிகளை தொகுத்து அவற்றை முழுமையாக நிறைவேற்றுவதற்கு தங்களின் முழு ஒத்துழைப்பு, வழிகாட்டுதல், எளிமைப்படுத்துதலை வழங்குவது இவர்களின் அடிப்படை தகுதிகளாக கருதப்படுகிறது.
தனி செயலாளர்கள் என்று அழைக்கப்படும் இவர்கள் யாரை சார்ந்திருக்கிறார்களோ அவர்களின் பணியை மட்டுமே ஒருங்கிணைப்பர். நிர்வாகத்தின் இயக்குனர் அல்லது தலைவர் இல்லாதபோது அவர்களின் பணி தொடர்பாக சிறிய அளவிலான முடிவுகளை உடனுக்குடன் எடுத்து அமல்படுத்துவதற்கான அதிகாரம், நம்பிக்கையின் பேரில் இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எந்த துறையை செயலாளர் சார்ந்திருக்கிறாரோ அந்த துறையை பற்றிய அனைத்து தகவல்கள், வரவு செலவு கணக்குகள், ஊழியர்களின் பணிவிபரம் போன்ற அனைத்து தகவல்களை தெரிந்து வைத்திருப்பதோடு வணிகநோக்கில் தங்கள் நிறுவனத்திற்குரிய நற்பெயர், மதிப்பு போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் திறன்படைத்தவராக இருத்தல் வேண்டும்.
நிறுவன தலைவரின் நேரத்தை வரையறுத்திருப்பதோடு அவரை சந்திக்கும் நபர்கள் என்ன நோக்கத்திற்காக பார்க்க விரும்புகிறார்கள், எப்படிப்பட்ட கேள்விகளை கேட்க விரும்புகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களுக்கு நேரத்தை ஒதுக்கிக் கொடுக்கும் வழிமுறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
தேவையில்லாத கேள்விகளை கேட்டு நிறுவன தலைவரின் நேரத்தை வீணாக்குவதற்கு எவருக்கும் அனுமதி அளிக்கக்கூடாது. அதேபோன்று குறிப்பிட்ட ஒரு பணியில் தேவைக்கு அதிகமாக நேரத்தை தலைவர் செலவிடாமல் பார்த்துக் கொள்வதும் செயலாளரின் கடமைகளில் ஒன்று.
நிறுவனம் தொடர்பாக நடத்தப்படும் கூட்டங்களில் யார் யார் கலந்து கொள்கிறார்கள், அவர்களில் யார் யாரை பேச அனுமதிப்பது, எவ்வளவு நேரம் கூட்டம் நடத்த வேண்டும், தலைவர் எப்போது கலந்து கொள்ள வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலை தயாரிப்பதோடு அதற்கேற்ப கூட்டம் நடத்தப்படு கிறதா என்பதை கண்காணிப்பதும் அவரது பொறுப்பு.
அதே போன்று தலைவர் கையெழுத்திட வேண்டிய öச்க்குகளை சரிபார்ப்பது, அவரின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள அறிக்கைகள் சுருக்கமாக தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை மேற்பார்வையிடுவது, தேவையான தகவல்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்வதும் செயலாளரின் முக்கியமான பணி.
பிற நிறுவனங்களுக்கு அனுப்ப வேண்டிய அறிக்கைகள் தொடர்பான தகவல்களை தலைவரிடமிருந்து கேட்டுபெற்று குறிப்பெடுத்துக் கொள்வது, நகல் எடுப்பது, உரிய நேரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைப்பது போன்றவற்றை செயலாளர் நேரிடையாக கண்காணிக்க வேண்டும்.
நிர்வாக திறமை, பணியின் மீது அபரிமிதமான தன்னம்பிக்கை, இக்கட்டான நேரங்களில் மிக முக்கியமான முடிவுகளை விரைவாக எடுத்து நிர்வாகத்தின் நற்பெயரை காப்பாற்றுதல் போன்றவை தனி செயல் அலுவலரின் தகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளது. பொதுவான மொழிகளில் சரளமாக பேசும் திறன்படைத்தவராகவும் செயல் அலுவலர் இருக்க வேண்டும்.
தொழிற்கல்வி நிலையங்களில் செயலாளருக்கென தனி பயிற்சி வகுப்புகள் அரசு மற்றும் தனியார் துறையினரால் நடத்தப்படுகின்றன. அதே போன்ற கோடைகால பயிற்சி வகுப்புகளும் இதற்கென்று பிரத்தியேகமாக செயல்பட்டு வருகின்றன. இதற்காக செயல்படும் கல்லூரி பெயர் விபரங்கள் வருமாறு:
* National Vocational Training Institute for Women, Sector-I, NOIDA- 201301.
* Regional Vocational Training Institute for Women, Kashinath Dhru. Street, Dadar W.Mumbai- 400028.
* Regional Vocational Training Institute for Women, Hosur Road, Bangalore- 560029.
* Regional Vocational Training Institute for Women, Kazhakuttom, Trivandrum- 695582.
* Regional Vocational Training Institute for Women, Thankti Satak, New Subzi Mandi, Hisar- 125001.
* Regional Vocational Training Institute for Women, Nanda Nagar, ITI Campus, Indore- 452003.
* Regional Vocational Training Institute for Women, 5 New Katra Road, Allahabad- 211002
* Regional Vocational Training Institute for Women, ITI Campus, Tarsali Road, Vadodara- 390009.
* Regional Vocational Training Institute for Women, ITI for Women, Banipark, Jaipur- 302016
* Regional Vocational Training Institute for Women, 10 and 10/1, Gariahat Road, Kolkatta-700019.
* YWCA of Delhi, Womens Training Institute, Bangla Sahib Lane, New Delhi- 110001.
* Institute for Vocational Studies, YMCA of Nizamuddin, Nizamuddin East, Delhi- 110013.
* College of Vocational Studies, Triveni(Sheikh Sarai)-II, New Delhi- 110017( Office Management and Secretarial Practice)
* South Delhi Polytechnic for Women, Behind Lady Shri Ram College, Lajpat Nagar IV, New Delhi- 110024.
தகுதியுள்ள செயலாளர்கள் நாட்டில் செயல்பட்டு வரும் கார்பரேட் நிறுனங்களில் ஏதாவது ஒன்றில் அதிக சம்பளத்துடன் பணியாற்றுவதற்கான வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. வேலையில் இவர்கள் காட்டும் ஈடுபாடு மற்றும் இவர்களின் செயல்திறனால் நிர்வாகத்திற்கு ஏற்படும் நற்பெயர் போன்றவற்றிற்கேற்ப நிர்வாகிகளின் நம்பிக்கையை பெற்று தனி செல்வாக்கும் கூடுதல் சம்பளம் மற்றும் சலுகைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
கூடுதல் மொழித்திறனை பெற்றிருப்பதன் மூலம் குறிப்பிட்ட நிறுவனத்தின் வெளிநாட்டு பிரதிநிதியாக பணியாற்றுவதற்கான வாய்ப்பினையும் தனி செயலர்கள் பெற்றுக்கொள்ளலாம். தன்னம்பிக்கை மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் இத்துறையை தேர்வு செய்து கொள்ளலாம்.
