மக்கள்தொகை கணக்கெடுப்பு சரிபார்ப்பு: ஆசிரியர்கள் தவிப்பு
மக்கள்தொகை கணக்கெடுப்பு சரிபார்ப்பு: ஆசிரியர்கள் தவிப்பு
UPDATED : மார் 02, 2011 12:00 AM
ADDED : மார் 02, 2011 12:24 PM
விருதுநகர்: மக்கள் தொகை கணக்கெடுப்பும், பிளஸ் 2 தேர்வுப்பணியும் வழங்கியுள்ளதால் ஆசிரியர்கள் எந்த பணிக்கு செல்வது என குழப்பத்தில் தவிக்கின்றனர்.இந்தியா முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் பிப். 28ம் தேதியுடன் முடிந்தது. கணக்கெடுப்பு பட்டியல் சரி செய்வதற்காக மார்ச் 1 முதல் 5ம் தேதி வரை இவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஐந்து நாட்களும் கணக்கெடுப்பாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 6ம் தேதி முதல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், கணக்கெடுப்பை ஒப்படைக்க அரசு தெரிவித்துள்ளது. கணக்கெடுப்பு பணியில் மேற்பார்வையாளர்களாக, பல, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கணக்கெடுப்பு செய்யப்பட்ட பகுதிகளில் சரி பார்ப்பு பணிகள் செய்ய வேண்டிய நிலையில் மேற்பார்வையாளர்கள் உள்ளனர். இவர்களில் பலர், பிளஸ் 2 தேர்வு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு சிலர் முதன்மை கல்வி அதிகாரிகளிடம், "தங்களை தேர்வு பணியிலிருந்து விடுவிக்கும்படி' தெரிவித்துள்ளனர். பலர் விபரம் தெரியாமல், எந்த பணிக்கு செல்வது என புரியாமல் தவித்து வருகின்றனர்.
