2,408 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு
2,408 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு
UPDATED : மார் 04, 2011 12:00 AM
ADDED : மார் 04, 2011 12:43 PM
சென்னை: தமிழகத்தில், 344 அரசு நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு 2,408 ஆசிரியர் பணியிடங்களை அனுமதித்தும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா வெளியிட்ட அரசாணை: அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், 344 அரசு நடுநிலைப் பள்ளிகள், 2011 - 12ம் கல்வியாண்டில் (வரும் கல்வியாண்டு) உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
தரம் உயர்த்தப்படும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு, தலா ஆறு பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 2,064 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 344 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களும் ஏற்படுத்தப்படும். 344 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக நிலை உயர்த்தப்படும். இவ்வாறு சபீதா கூறியுள்ளார்.
