தேர்வு நேரத்தில் தேர்தல்: ஆசிரியர், மாணவர்கள் கவலை
தேர்வு நேரத்தில் தேர்தல்: ஆசிரியர், மாணவர்கள் கவலை
UPDATED : மார் 04, 2011 12:00 AM
ADDED : மார் 04, 2011 12:47 PM
மதுரை: பள்ளித் தேர்வு நேரத்தில் தேர்தல் நடத்துவதால் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர். தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஏப்., 13ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான மனுத்தாக்கல் மார்ச் 19ல் துவங்க உள்ளது. அதன்பின் தேர்தல் திருவிழா துவங்கிவிடும்.
ஏப்ரல் இறுதி, மே முதல்வாரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்ற எண்ணத்தில் அனைத்து கட்சிகளும் சற்று மெதுவாகவே பணிகளில் ஈடுபட்டிருந்தன. இந்நிலையில் ஏப்., 13ம் தேதி என வெகு அருகில் தேதியை அறிவித்ததால் அனைத்து கட்சிகளிடமும், அதிர்ச்சியுடன், பரபரப்பும் தொற்றிக் கொண்டது. கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
மார்ச் 19க்குப் பின் ஒரு மாதகாலம் அனைத்து கட்சி தலைவர்களும் பிரசாரத்தில் தீவிரமாக இருப்பர். இக்காலகட்டத்தில் தற்போது நடந்து வரும் பிளஸ்2 தேர்வு மார்ச் 22 வரை நடக்கிறது. அதேநாளில் பத்தாம் வகுப்பு மெட்ரிக் தேர்வு துவங்குகிறது. பின் மார்ச் 28ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளும் துவங்குகிறது.
இத்தேர்வுகள் ஏப்.,11ம் தேதி வரை நடைபெறும். அதன்பின் நடுநிலை, துவக்க நிலை பள்ளி மாணவர்களுக்கு இறுதி கட்ட வகுப்புகள், தேர்வுகள் என ஏப்., 30 வரை பள்ளி நடைபெறும். தேர்தல் பிரசாரத்திற்காக அரசியல் கட்சிகள் பேனர்கள், கொடிகள் கட்டி ஆரவாரமாக இருக்கும். ஊர்வலம், மைக்செட், பொதுக்கூட்டம் என தெருக்களில் களைகட்டும். இந்த பரபரப்பு பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை வெகுவாக பாதிக்கும்.
மார்ச் 22க்கு பின் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்குச் செல்வர். ஏப்., 11க்கு பிறகு பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்வர். இந்நிலையில் தேர்தல் பணிக்கான மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இதில் பள்ளி ஆசிரியர்களே பெரும்பாலும் பங்கேற்பர். இதனால் தேர்வுப் பணிகளும், தேர்தல் பணிகளும் ஒன்றுக்கொன்று இடையூறாக இருக்கும்.
மதுரையை பொறுத்தவரை தேர்தல் நாளில் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. திருவிழா சமயத்தில் தேர்தல் நடைபெறுவதால் அதற்கும் பாதிப்பு வரலாம். தமிழகத்தில் முன்னதாகவே தேர்தல் நடத்தும் அறிவிப்பு புரியாத புதிராக இருப்பதாகவே அரசியல் கட்சியினர் கூறுகின்றனர். ஏப்., 13ல் ஓட்டுப் பதிவு முடிந்து மே 13 வரை முடிவை அறிய காத்திருக்கும் நிலை உள்ளது.
மேற்கு வங்கத்தில் ஆறு கட்டங்களாக தேர்தல் நடத்துகின்றனர். இதில் மே மாதத்தில் 3, 7, 10ம் தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்த நாட்களில் ஏதாவது ஒரு நாள் தேர்தல் நடத்தியிருந்தால் பள்ளிகள் பாதிக்கப்படாது. ஓட்டு இயந்திரங்களுக்கும் ஒருமாத பாதுகாப்பு தேவையிராது என ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் புலம்புகின்றனர். போலீசாரும் ஓட்டு இயந்திர பாதுகாப்பிற்காக நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை.
