தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசின் கருணையை எதிர்பார்க்கும் பிசியோதெரபிஸ்ட் பட்டதாரிகள்

அரசின் கருணையை எதிர்பார்க்கும் பிசியோதெரபிஸ்ட் பட்டதாரிகள்

அரசின் கருணையை எதிர்பார்க்கும் பிசியோதெரபிஸ்ட் பட்டதாரிகள்


UPDATED : மார் 06, 2011 12:00 AM

ADDED : மார் 06, 2011 12:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 06, 2011 12:00 AM ADDED : மார் 06, 2011 12:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு மருத்துவமனைகளில் புதிய பணியிடங்களை ஏற்படுத்தாதது மற்றும் மாநில பிசியோதெரபி கவுன்சில் அமைக்காதது போன்ற சிக்கல்களால் பிசியோதெரபி பட்டதாரிகளின் நிலைமை மோசமாகியுள்ளது.


நரம்பியல், இதயவியல், எலும்பு முறிவு, மகப்பேறியல், குழந்தைகள் நலம் போன்ற மருத்துவ துறைகளோடு பிசியோதெரபிக்கு முக்கிய தொடர்பு உண்டு. மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளை மேற்கொள்வோர் மற்றும் குறை பிரசவ குழந்தைகளின் மறுவாழ்வில் பிசியோதெரபிஸ்ட்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.


தமிழகத்தில் உள்ள 35 பிசியோதெரபி பட்டப்படிப்பு அளிக்கும் கல்லூரிகளில் இரண்டு மட்டுமே அரசு கல்லூரிகள். இவற்றிலும் போதுமான பேராசிரியர்கள் கிடையாது. கிராமப்புறங்களில் புதிய பிசியோதெரபி கல்லூரிகள், மாநில பிசியோதெரபி கவுன்சில், அரசு மருத்துவமனைகளில் பிசியோதெரபிஸ்டுகளுக்கு புதிய பணி நியமனங்கள் போன்ற தமிழக அரசின் அறிவிப்புகள் ஆண்டுக்கணக்கில் செயல்படுத்தப்படாததால் பிசியோதெரபி பட்டதாரிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.


இதுகுறித்து பிசியோதெரபிஸ்ட் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் கிருஷ்ணகுமார் கூறியதாவது, "தமிழகத்தில் 1,562 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றில் பிசியோதெரபிஸ்ட்களை நியமிப்பதன் மூலம், இத்துறையில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கையை கணிசமான அளவு குறைக்கலாம். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சைகளை மேற்கொள்ளும் கிராமப்புறத்தினர் மேல்சிகிச்சைக்காக மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளுக்கு செல்வதையும் தவிர்க்கலாம்.


எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலையின் விதிமுறைப்படி, ஒரு பிசியோதெரபி கல்லூரியில் 10 உதவி பேராசிரியர்கள் இருக்க வேண்டும். சென்னை மற்றும் திருச்சி அரசு பிசியோதெரபி கல்லூரிகளில் இவ்விதிமுறை பின்பற்றப்படவில்லை. கிராமப்புறங்களில் புதிய பிசியோதெரபி கல்லூரிகள் துவங்கப்படும் என 2006 ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. இதுநாள் வரை அரசின் சார்பில் ஒரு கல்லூரி கூட துவங்கவில்லை.


மாநில பிசியோதெரபி கவுன்சில் அமைப்பதற்கான அரசாணை 2008ம் ஆண்டு, அக்டோபர் 18ம் தேதி வெளியானது. ஆனால் அக்கவுன்சிலும் அமைக்கப்படவில்லை. இதனால் பணி பாதுகாப்பின்மை, பணிக்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்காதது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நாங்கள் ஆளாகிறோம். கடந்த செப்டம்பரில், "அரசு மருத்துவமனைகளில் புதிதாக 600 பிசியோதெரபிஸ்ட்கள் நியமிக்கப்படுவர்" என சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்த அறிவிப்பும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.


பிசியோதெரபியில் முதுநிலை பட்டப்படிப்பு (எம்.பி.டி.,) முடித்தவர்கள் தான் பிசியோதெரபி கல்லூரிகளில் முதல்வராக இருக்க வேண்டும். அரசு பிசியோதெரபி கல்லூரிகளில் இந்நடைமுறை பின்பற்றப்படவில்லை. அரசு கல்லூரிகளில் எம்.பி.டி., பட்டப்படிப்பும் இதுவரை துவங்கவில்லை. இவ்வாறு கிருஷ்ணகுமார் கூறினார்.


இன்றைய நவீன மருத்துவத்தில் தவிர்க்க முடியாதவர்களாக உள்ள பிசியோதெரபிஸ்ட்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், பட்டப்படிப்பிற்கு இத்துறையை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்து, நாளடைவில் இத்துறை அழியும் அபாயம் ஏற்படும்.


உலக சுகாதார நிறுவனத்தின் அறிவிப்புப் படி, 10 ஆயிரம் பேருக்கு ஒரு பிசியோதெரபிஸ்ட் தேவை. ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகளில் மொத்தம் 160 பிசியோதெரபிஸ்டுகள் தான் உள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ பிசியோதெரபிஸ்ட்களே இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us