UPDATED : மார் 12, 2011 12:00 AM
ADDED : மார் 12, 2011 03:19 PM
அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி மையம் (ஏஐசிடிஇ) மேனேஜ்மென்ட் கல்வியை வழங்கும் நிர்வாகங்களுக்கு முதுகலை டிப்ளமோ மற்றும் முதுகலை சான்றிதழ் படிப்புகளுக்கான சேர்க்கை விதிமுறைகளில் சிறிய மாற்றங்களை செய்துள்ளது.
அதாவது, மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனங்கள், தங்களது மாணவர் சேர்க்கைக்கு காமன் அட்மிஷன் டெஸ்ட் (கேட்), மேனேஜ்மென்ட் ஆப்டிடியூட் டெஸ்ட் (மேட்) அல்லது மேனேஜ்மென்ட் சேர்க்கைக்காக மாநில அரசால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வின் முடிவு என இதில் ஏதாவது ஒன்றையோ அல்லது ஒரு சில தேர்வு முடிவுகளை ஒன்றாக இணைத்தோ எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
சமீபத்தில்தான் ஏஐசிடிஇ, மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என சிக்கலான விதிமுறைகளை தயாரித்து வழங்கியது. அதில் சில விதிமுறைகளை எதிர்த்து மேனேஜ்மென்ட் கல்வி நிலையங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. அப்படி மேனேஜ்மென்ட் கல்வி நிலையங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத விதிமுறைகளில் மாற்றம் செய்யாமல் தற்போது ஒரு சிறிய மாற்றத்தை ஏஐசிடிஇ செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் பாடப்பிரிவில் சேர்க்க மாநில அரசு எந்தவிதமான நடவடிக்கையை எடுக்கிறதோ அதேப்போன்றுதான் மற்ற மேனேஜ்மென்ட் கல்வி நிலையங்களிலும் சேர்க்கை நடைபெற வேண்டும்.
அதன்படி கடந்த டிசம்பர் 30ஆம் தேதி ஏஐசிடிஇ வெளியிட்ட அறிக்கையின்படி, கேட், மேட் அல்லது மாநில அரசு நடத்தும் தேர்வை அடிப்படையாகக் கொண்டு பி-ஸ்கூல் சேர்க்கை நடைபெறும் என்று கூறப்பட்டது.
இதை மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனங்கள் எதிர்க்கின்றன. மேனேஜ்மென்ட் கல்வி நிலையங்களில் சேர்க்கைக்கான நடைமுறைகளை மாநில அரசே நிர்ணயிக்கும் என்றால், அது எங்களது தன்னாட்சியை விட்டுக் கொடுப்பதாகவே உள்ளது. மேலும், மேனேஜ்மென்ட் சேர்க்கையை அரசிடம் ஒப்படைப்பதால் ஊழலும், மெத்தனமும் ஏற்படும் என்று கூறி இந்த விதிமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
