தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மார்க் ஷீட் வழங்காத திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

மார்க் ஷீட் வழங்காத திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

மார்க் ஷீட் வழங்காத திருவள்ளுவர் பல்கலைக்கழகம்


UPDATED : மார் 13, 2011 12:00 AM

ADDED : மார் 13, 2011 11:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 13, 2011 12:00 AM ADDED : மார் 13, 2011 11:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு


ஐந்து செமஸ்டர் வரை மார்க் ஷீட் வழங்காமல் திருவள்ளுவர் பல்கலை அலட்சியமாக இருப்பதால், 50 ஆயிரம் மாணவ, மாணவியரின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.


கடந்த 2002ம் ஆண்டு வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் திருவள்ளுவர் பல்கலையின் கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 95 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கடந்த 2007 - 08ம் ஆண்டு முதல் செமஸ்டர் சிஸ்டம் (பருவ முறை) தேர்வு நடைமுறைக்கு வந்தது.


2008ம் ஆண்டு முதல் உள் மதிப்பீட்டு (இன்டர்னல் தேர்வு) முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறையில் நடத்தப்பட்ட தேர்வுகளில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தது. 2007ம் ஆண்டு ஆங்கிலம் தேர்வுத் தாள் திருத்தும் பணி நடந்து கொண்டிருக்கும்போதே, தேர்வு முடிவுகள் பல்கலை இணையதளத்தில் அரைகுறையாக வெளியிடப்பட்டு மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.


கடந்த 2009ம் ஆண்டு இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் பல மாணவர்கள் தோல்வியடைந்ததாகவும், கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மார்க் பட்டியலில் தோல்வியடைந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் முரண்பாடான முடிவுகளை பல்கலை நிர்வாகம் வெளியிட்டது. இரு ஆண்டுகளுக்கு மேலாக மார்க் ஷீட் வழங்கப்படவில்லை.


கடந்த வாரம் வேலூர் ஊரிஸ் கல்லூரி மாணவர்கள், ஐந்து செமஸ்டர் வரை மார்க் ஷீட் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊரிஸ் கல்லூரி நிர்வாகம், திருவள்ளுவர் பல்கலையுடன் நடத்திய பேச்சில், கூடிய விரைவில் ஐந்தாவது செமஸ்டர் தேர்வு மார்க் ஷீட் வழங்கப்படும் என பல்கலை உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.


இந்த நிலையில், திருவள்ளுவர் பல்கலையின் கீழ் இயங்கி வரும் 95 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தன்னாட்சி பெற்ற ௬ தவிர மீதமுள்ள 89 கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவியர் அடுத்த மாதம் (ஏப்ரல்) மத்தியில் இறுதி செமஸ்டர் தேர்வு எழுதுகின்றனர். அவர்களுக்கு 2008ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டுள்ள ஐந்து செமஸ்டர் மார்க் ஷீட்கள் வராததால், இறுதியாண்டு தேர்வு முடிந்த பின் மார்க் ஷீட் இல்லாமல் என்ன செய்வது என 50 ஆயிரம் மாணவ, மாணவியர் விரக்தியடைந்துள்ளனர். இது வரை ஒரு செமஸ்டருக்கு கூட மார்க் ஷீட் வழங்கப்படாததால் அவர்கள் எதிர் காலமே கேள்விக்குறியாக உள்ளது.


திருவள்ளுவர் பல்கலை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது, "காட்பாடியை அடுத்த சேர்க்காட்டில் திருவள்ளுவர் பல்கலை இடம்மாறிய பிறகும், மார்க் ஷீட் தயாரிக்கும் கம்ப்யூட்டர் பிரிவு அங்கு கொண்டு வரப்படவில்லை. இன்னமும் கோட்டையில்தான் செயல்படுகின்றது. அங்குள்ள பழைய கட்டடத்தில் மாணவர்கள் தேர்வு எழுதிய விடைத்தாள்கள் பாதுகாப்பில்லாமல் கிடக்கிறது. சேர்க்காட்டில் இன்டர்நெட் வசதி வரவில்லை. மேலும் பழைய மார்க் பற்றிய ஆவணங்கள், கோப்புக்கள் பல்கலையில் பாதுகாப்பாக இல்லை. கம்ப்யூட்டரில் பதிவுசெய்து வைக்கப்பட வேண்டிய டேட்டா பேஸ் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் மார்க் ஷீட் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக" கூறினர்.


திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது, "மார்க் பட்டியலை புதிய வடிவத்தில் அச்சிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தவிர பல்கலையின் கீழ் இயங்கி வரும் கல்லூரிகளில் இருந்து மார்க் விவரம் மிகவும் கால தாமதமாக எங்களுக்கு வருகின்றது. மேலும் மார்க் பட்டியலை தயாரிக்க பல்கலையில் ஆட்கள் குறைவாக இருந்தனர்.


இதனால் பட்டியல் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது மூன்றாம் ஆண்டு செமஸ்டர் படிக்கும் மாணவ, மாணவியரின் நலன் கருதி எல்லா பணிகளும் வேகமாக நடந்து வருகின்றது. இன்னும், இரண்டு நாளில் எல்லா கல்லூரிகளுக்கும் முதல் கட்டமாக இரு செமஸ்டர் தேர்வுக்கான மார்க் ஷீட் வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள மூன்று செமஸ்டர் மார்க் ஷீட் அடுத்த வாரத்தில் வழங்கப்படும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us