UPDATED : மார் 13, 2011 12:00 AM
ADDED : மார் 13, 2011 11:25 AM
தமிழகத்தில் தொடக்க முன் பருவ ஆசிரியர் பயிற்சியான (பிரி பிரைமரி, மாண்டிசோரி, நர்சரி, கிண்டர் கார்டன்) பயிற்சி முடித்த மாணவ, மாணவியர் ஒரு லட்சம் பேர் தமிழகம் முழுவதும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து காத்திருக்கின்றனர். 2006க்கு முன் முடித்தவர்களுக்கு பணி கிடைத்துள்ளது. அதற்குப் பின் அரசு, பணி நியமனத்தை தற்காலிமாக நிறுத்தி வைத்தது. 2002 - 2004ம் ஆண்டு வரை அறிவிக்கப்பட்ட பள்ளிக் கல்வி அரசு ஆணைகளில், முன் பருவ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களையும், தொடக்கப் பள்ளிகள் 1, 2 வகுப்புகளுக்கு இளநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யலாம் என்று அப்போதைய அரசு ஆணை பிறப்பித்திருந்தது. தொகுப்பூதியம் பெற்றவர்களை முழு நேரப் பணியாளர்களாக பணியமர்த்தவும் அரசு உத்தரவிட்டது.
ஆனால் அதன்படி கல்வித்துறை அதிகாரிகள் பின்பற்றவில்லை. பயிற்சி முடித்து வேலை வாய்ப்புக்காக காத்திருந்த ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் பலன் இல்லை. வேறு வழியின்றி சிலர் நீதி கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளனர். ஆசிரியர்களின் மனுவை பரிசீலித்த நீதிமன்றம், எட்டு வார காலத்தில் பதில் மனு அனுப்புமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அதைத் தொடர்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திலிருந்து 1, 2 வகுப்புகளுக்கு பணியிடம் காலி ஏற்படும்போது தொடக்கக் கல்வி அலுவலர் மூலம் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்ற பதில் மட்டும் அனுப்பியுள்ளனர்.
