பல்கலையானது செட்டிநாடு மருத்துவ கல்லூரி; அரசு ஒதுக்கீடு ‘கட்’
பல்கலையானது செட்டிநாடு மருத்துவ கல்லூரி; அரசு ஒதுக்கீடு ‘கட்’
UPDATED : ஆக 09, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: செட்டிநாடு மருத்துவக் கல்லூரிக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தை வழங்கியுள்ளது.
எனவே, 13ம் தேதி நடக்கவுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங்கில் அக்கல்லூரி இடம்பெறாது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்ககத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்கவுள்ளது.
இக்கவுன்சிலிங்கில், முதற்கட்ட கவுன்சிலிங்கின் முடிவில் அரசு மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள இடங்கள், தனியார் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள இடங்கள் ஆகியவை நிரப்பப்படவுள்ளன.
இரண்டாம் கட்ட மருத்துவ கவுன்சிலிங்கில், தனியார் மருத்துவக் கல்லூரிகளான செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் 83 இடங்கள், பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லூரியில் 55 இடங்கள், ஸ்ரீமூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் 43 இடங்கள், ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் 83 இடங்கள் நிரப்பப்பட இருந்தன.
இந்நிலையில், செட்டிநாடு மருத்துவக் கல்லூரிக்கு நிகர்நிலை பல்கலைக் கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் உள்ள மொத்த இடங்களையும் அதன் நிர்வாகமே தானாக நிரப்பிக்கொள்ளும். எனவே, செட்டிநாடு மருத்துவக் கல்லூரியிலிருந்து இந்த ஆண்டு தமிழக அரசு ஒதுக்கீட்டிற்கு கிடைக்க இருந்த 83 இடங்கள் கிடைக்காது.
இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவக் கல்லூரிக்கு கடந்த 4ம் தேதி நிகர்நிலை பல்கலைக் கழக அந்தஸ்தை வழங்கியுள்ளது. இது தொடர்பான கடிதம் கடந்த 6ம் தேதி கிடைத்தது.
எனவே, 13ம் தேதி நடைபெறவுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில், உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங்கில் இக்கல்லூரி இடம்பெறாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 8ம் தேதி மாலை 5 மணி நிலவரப்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள காலியிட விவரங்களையும் மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தர்மபுரி மருத்துவுக் கல்லூரியில் 85, வேலூர் மருத்துவக் கல்லூரியில் 12, சென்னை மருத்துவக் கல்லூரியில் பத்து, மதுரை மற்றும் கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரிகளில் தலா எட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் ஏழு, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் ஆறு, கீழ்ப்பாக்கம், செங்கல்பட்டு, திருச்சி மருத்துவக் கல்லூரிகளில் தலா ஐந்து, ஸ்டேன்லி, கோவை, தூத்துக்குடி, தேனி மருத்துவக் கல்லூரிகளில் தலா நான்கு, சேலம் மருத்துவக் கல்லூரியில் இரண்டு என மொத்தம் 169 இடங்கள் காலியாக உள்ளன.

