இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு இனிமேல் விண்ணப்பிக்க முடியுமா?
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு இனிமேல் விண்ணப்பிக்க முடியுமா?
UPDATED : செப் 08, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
ஜூலை 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடந்த இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவியரும், பெற்றோரும் தொடர்ந்து ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது சந்தேகளுக்கு விளக்கம் பெற்றனர்.
மாணவர்கள், பெற்றோரது கேள்விகளும், நிபுணரின் பதில்களும்:
98.5 கட்-ஆப் மதிப்பெண் பெற்றுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நான் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கவில்லை. இனிமேல் எனக்கு இன்ஜினியரிங் சீட் கிடைக்க வாய்ப்புள்ளதா?
-துர்கா, மதுரை
பிற்படுத்தப்படுத்தப்பட்ட வகுப்பினர் பிளஸ் 2 தேர்வில் வேதியியல், இயற்பியல், கணிதம் ஆகிய மூன்று பாடங்களிலும் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் உங்களது மதிப்பெண் 50 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதால் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க முடியும். சில நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தாலே சேர்க்கிறார்கள். அங்கு வேண்டுமானால் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த எனது கட்-ஆப் மதிப்பெண் 111.75; எனக்கு இன்ஜினியரிங் சீட் கிடைக்குமா?
-கல்யாண்குமார், மதுரை
தற்போது நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் 140.50 கட்-ஆப் மதிப்பெண் வரை பெற்றுள்ள மாணவ, மாணவியர் அழைக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் கட்ட கவுன்சிலிங் ஆகஸ்ட் 16ம் தேதி துவங்கும். மூன்றாம் கட்ட கவுன்சிலிங்கிற்கு நீங்களும் அழைக்கப்படுவீர்கள்.
ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்த நான், 95 கட்-ஆப் பெற்றுள்ளேன். எனக்கு இன்னும் கவுன்சிலிங்கிற்கான அழைப்பு கடிதம் வரவில்லை.
-யாழினி, ராமநாதபுரம்
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பிரிவுகளை பொறுத்தவரை, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி உண்டு. மூன்றாம் கட்ட கவுன்சிலிங்கிற்கு தகுதி உள்ள மாணவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பட்டு வருகிறது.
பி.எஸ்சி., இயற்பியல் வகுப்பில் சேர்ந்துள்ள நான் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கும் விண்ணப்பித்துள்ளேன். எனது கட்-ஆப் மதிப்பெண் 138.25; தற்போதைய படிப்பில் தொடரலாமா? அல்லது இன்ஜினியரிங் படிப்பில் சேரலாமா?
-பாரத், மதுரை
எந்த படிப்பில் சேர்ந்தாலும் அதில் நன்கு படித்தால் தான் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. தமிழகத்தில் 340க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்நிலையில், சிறப்பாக படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் நலன் கருதி அண்ணா பல்கலைக்கழகமே பொதுவான கேம்பஸ் இன்டர்வியூவிற்கு ஏற்பாடு செய்கிறது.
அதிக மதிப்பெண் எடுத்த அனைத்து இன்ஜினியரிங் கல்லூரிகளைச் சேர்ந்த சிறந்த மாணவர்கள் இந்த கேம்பஸ் இன்டர்வியூக்கு அழைக்கப்படுகின்றனர். நன்றாக படித்தால் பி.எஸ்சி., படிப்பிற்கும் கூட நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன. முதுகலை, டாக்டர் பட்டம் பெற்று பேராசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும் ஆகலாம். பி.எஸ்சி., மாணவர்களைக் கூட சாப்ட்வேர் நிறுவனங்கள் தற்போது திறமையின் அடிப்படையில் வேலைக்கு தேர்வு செய்யத்துவங்கியுள்ளன.
பிளஸ் 2 உடனடி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன். இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்குபெற இனிமேல் விண்ணப்பிக்க முடியுமா?
- காமாட்சி, சென்னை
ஜூலை 11ம் தேதி முதல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. தற்போது இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கும் நிலையில், மூன்றாவது கட்ட கவுன்சிலிங் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிவடையும். அதன்பிறகு காலியாக உள்ள இடங்களுக்கு தனியாக துணை கவுன்சிலிங் நடத்தப்படும். உடனடி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அப்போது விண்ணப்பிக்கலாம். முக்கிய கல்லூரிகளில் இடங்கள் காலி இருக்காது என்பதால், விரும்பிய கல்லூரிகளில், விரும்பிய பாடப்பிரிவுகளில் இடம் கிடைக்குமா என இப்போது கூறமுடியாது.
எனது மகனது கட்-ஆப் 160. மரைன் இன்ஜினியரிங் அல்லது மெக்கானிக்கல் படிக்க ஆர்வமாக உள்ளார். கண் கண்ணாடி அணிந்திருப்பதால், மரைன் இன்ஜினியரிங் படிப்பில் சேர தகுதி உண்டா? இவற்றில் எந்த படிப்பு சிறந்தது?
-பொன்னையா, திருத்தணி
மரைன் இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கு உடற்தகுதியும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. கலர் பிளைன்ட் உள்ளிட்ட சோதனைகள் செய்யப்படுகின்றன. இப்படிப்பிற்கு கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் அனைத்து பிரிவினரும் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஆங்கில பாடத்தில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பிற்கு அரசு அறிவித்துள்ளபடி, உரிய மதிப்பெண் தகுதிகள் அவசியம். படிப்புகளை பொறுத்தவரை, உயர்ந்தது தாழ்ந்தது என்ற வேறுபாடுகள் இல்லை. எப்படி படிக்கிறோம் என்பதை பொறுத்துத்தான் எதிர்காலம். உங்களது விருப்பம், தகுதித்திறன் உள்ளிட்ட அம்சங்களை பொறுத்து, கலந்து ஆலோசித்து எந்த படிப்பில் சேர்வது என முடிவு எடுக்க வேண்டும்.
நான் 193 கட்-ஆப் மதிப்பெண் பெற்றுள்ளேன். பி.எஸ்சி., பயோடெக்னாலஜி முதலாமாண்டு படித்துவருகிறேன். இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கவில்லை. எனக்கு இன்ஜினியரிங் சீட் கிடைக்குமா?
- லீனா, தின்டிவனம்
அதிக மதிப்பெண் பெற்றும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்காதது உங்களது கவனக்குறைவு என்று தான் சொல்ல வேண்டும். விண்ணப்பிக்காத மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது. மூன்று கட்ட கவுன்சிலிங் நிறைவடைந்த பிறகும், காலியாக உள்ள இடங்களுக்கு மறு கவுன்சிலிங் நடத்தப்படும். அப்போது, மிக சாதாரணமான கல்லூரிகளில் ஏதாவது பாடப்பிரிவுகளில் இடம் கிடைக்கலாம். பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் சேர்வதாக இருந்தால், உடனடியாக முயற்சிக்க வேண்டும். நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும் பொறியியல் படிப்புகளில் சேர முயற்சிக்கலாம். அதற்கான பண வசதி உள்ளதா என்பதையும் பார்த்துக்கொள்ளவும் அல்லது தற்போது சேர்ந்துள்ள பட்டப்படிப்பை முடித்துவிட்டு லேட்டரல் என்ட்ரி மூலம் பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டில் சேர்வதற்கான வாய்ப்பு குறித்தும் பெற்றோரிடம் கலந்து பேசி பரிசீலிக்கலாம்.
நான் 159.25 கட்-ஆப் மதிப்பெண் பெற்றுள்ளேன். பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கவில்லை. இப்போது என்ன செய்வது?
-சத்யா, கோவை
கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்காமல் அரசு ஒதுக்கீட்டின்கீழ் பொறியியல் கல்லூரிகளில் சேர முடியாது. சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் சேரலாம். ஆனால், கட்டணம் ரூ.62 ஆயிரத்து 500. தற்போதைய கவுன்சிலிங் முடிந்தபிறகு, நடைபெறும் துணை கவுன்சிலிங்கில் விரும்பிய கல்லூரிகளில் விரும்பிய படிப்புகளில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு.
கடந்த 23ம் தேதி நடந்த கவுன்சிலிங்கில் வேலூரில் ஒரு இன்ஜினியரிங் கல்லூரியை தேர்ந்தெடுத்துள்ளேன். உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தங்கி படிக்க விரும்புகிறேன். இப்போது கல்லூரியை மாற்றிக்கொள்ள முடியுமா? இல்லையென்றால், அடுத்த ஆண்டு கவுன்சிலிங்கில் மீண்டும் பங்கேற்கலாமா?
-மீனாம்பிகை, திருப்பத்தூர்
கவுன்சிலிங்கில் ஒருமுறை கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்துவிட்டு வந்தபிறகு, மீண்டும் மாற்றிக்கொள்ள முடியாது. கவுன்சிலிங்கின்போதே சரியாக முடிவு செய்திருக்க வேண்டும். நீங்கள் கூறுவதுபோல இரண்டாம் ஆண்டில் கல்லூரியை மாற்றுவதற்கான வசதி இருந்தால் கூட நீங்கள் தற்போது சேர்ந்துள்ள சுயநிதி கல்லூரி நிர்வாகம் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும். அத்துடன் நீங்கள் சேர விரும்பும் கல்லூரியும் சம்மதிக்க வேண்டும். அதற்கு பிறகு, தொழில்நுட்ப கல்வித்துறை மூலம் மாறுதல் பெற விண்ணப்பிக்க முடியும். தற்போதைய நிலையில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் காலியிடங்கள் இருந்தால் அதில் சேரலாம். ஆனால் அதற்கு கூடுதல் கட்டணம் இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். அத்துடன் கவுன்சிலிங்கின்போது செலுத்திய ரூ.5 ஆயிரம் திரும்ப கிடைக்காது. அடுத்த ஆண்டு மீண்டும் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்து, விரும்பிய கல்லூரியை தேர்வு செய்வதால் ஒரு ஆண்டு காலம் வீணாகும். நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பாடப்பிரிவை தேர்வு செய்யாமல் கவுன்சிலிங் அறையில் இருந்து வெளியேறினால், செலுத்திய தொகை திரும்ப கிடைக்குமா?
-லட்சுமி பிரியா, சென்னை
கவுன்சிலிங்கில் கலந்துகொள்பவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனவே, கவுன்சிலிங்கில் விரும்பிய கல்லூரி, பாடப்பிரிவு கிடைக்காவிட்டாலோ, இன்ஜினியரிங் சீட் பெற விருப்பம் இல்லை என்றாலோ கல்லூரியை தேர்வு செய்யாமலேயே வெளியேறலாம். நீங்கள் செலுத்திய (ரூ.5 ஆயிரம், எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவு மாணவர்களானால் ரூ.ஆயிரம்) கட்டணம் திரும்ப கிடைக்கும். ஆனால், கவுன்சிலிங்கில் இடத்தை தேர்வு செய்து அட்மிஷன் பெற்ற பிறகு கல்லூரியில் சேர விரும்பவில்லை என்றால் கட்டணத்தை திரும்ப பெற முடியாது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த எனது கட்-ஆப் 120.5; நான் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து தேர்வு செய்ய முடியுமா?
-சூர்யபிரகாஷ், மதுரை
நீங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கான இடஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களில் இருந்து தேர்வு செய்துகொள்ளலாம். பொதுப்பிரிவில் உள்ள இடங்களில் இருந்தும் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால், பிற வகுப்பினருக்கான ஒதுக்கீட்டின்கீழ் தேர்வு செய்ய முடியாது.
எனது மகளுக்கு பிற மாநில மாணவர்களுக்கான ஒதுக்கீட்டின்கீழ் இடம்பெற விண்ணப்பித்துள்ளேன். அவரது கட்-ஆப் மதிப்பெண் 170. பிற மாநில மாணவர்களுக்கான காலியிடங்களை பூர்த்தி செய்ய எப்போது கவுன்சிலிங் நடக்கும்?
- மீனா, கொல்கத்தா
பிற மாநில மாணவர்களுக்கான மூன்றாம் கட்ட கவுன்சிலிங் ஆகஸ்ட் 11ம் தேதி நடக்கிறது. அதில் கிழக்கு பிராந்திய மாணவ, மாணவியர்க்கான குறைந்தபட்ச கட்-ஆப் 179.44 என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலிங் முடிவிலும் இடம் காலியாக இருந்தால், அடுத்த கட்ட கவுன்சிலிங் நடத்தப்படும். அதில் உங்கள் மகளும் அழைக்கப்படலாம்.
எனது கட்-ஆப் மதிப்பெண் 105; எஸ்.சி., பிரிவு. இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்துள்ள எனக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை. எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்குமோ என்று நினைக்கிறேன். என்ன செய்வது?
- ஜெயந்த், கோவை
இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் அலுவலகத்தில் விவரங்களை கேட்டு அறியலாம். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் பட்சத்தில், மூன்றாம் கட்ட கவுன்சிலிங்கிற்கு நீங்கள் அழைக்கப்படுவீர்கள்.
150.5 கட்-ஆப் மதிப்பெண் பெற்றுள்ள எனக்கு விளையாட்டு பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தேர்வு செய்ய முடியுமா?
-ஸ்ரீயுவரேகா, பரமக்குடி
விளையாட்டு பிரிவின்கீழ் தேர்வுசெய்யப்படும் மாணவர்கள் பட்டியல் தனியாக வெளியிடப்படும். பொது கவுன்சிலிங்கின்போது முன்னாள் ராணுவத்தினர் மட்டுமே அவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களை தேர்வு செய்யலாம். அதில் இடம் இல்லாவிட்டால் தங்களது சாதி பிரிவு ஒதுக்கீட்டின்கீழ் இடங்களை பெறலாம். ஆனால், பொது கவுன்சிலிங்கின்போது விளையாட்டு பிரிவின்கீழ் இடஒதுக்கீடு பெற முடியாது.
தொழில்கல்வி பிரிவைச் சேர்ந்த எனது கட்-ஆப் 141.17; நான் பொதுப்பிரிவு கவுன்சிலிங் ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களை தேர்வு செய்ய முடியுமா?
-ஜெயப்பிரகாஷ், சேலம்
தொழில்கல்வி பிரிவு மாணவர்களுக்கான 3ம் கட்ட கவுன்சிலிங் ஆகஸ்ட் 11ம் தேதி நடக்கிறது. அதில் குறைந்தபட்சம் 151 கட்-ஆப் மதிப்பெண் வரை பெற்ற மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த கவுன்சிலிங்கில் காலி இடங்கள் இருந்தால், நான்காம் கட்ட கவுன்சிலிங் நடைபெறும். தொழில்கல்வி மாணவர்கள் பொதுப்பிரிவு கவுன்சிலிங் ஒதுக்கீட்டில் உள்ள இடங்களை தேர்வு செய்ய முடியாது.
138.25 இன்ஜினியரிங் கட்-ஆப் பெற்றுள்ள நான் பி.எஸ்சி., இயற்பியல் படிப்பில் சேர்ந்துள்ளேன். இன்ஜினியரிங் படிக்க ஆர்வமாக உள்ளேன். பள்ளியில் தமிழ் வழியிலேயே படித்ததால், இன்ஜினியரிங் படிப்பு கடினமானதாக இருக்கும் என்று நண்பர்கள் சொல்கிறார்கள்?
- பாரத், மதுரை
தமிழ்வழியில் படித்தாலும் உயர்கல்வியை முடித்து சாதனை படைத்த பலரை உதாரணம் காட்ட முடியும். பள்ளியில் தமிழ் வழியில் படித்தாலும் இன்ஜினியரிங் படிப்பில் தங்களது தகுதி மற்றும் உழைப்பின் மூலம் சிறப்பாக மதிப்பெண் பெற முடியும். ஆனால், வேலை வாய்ப்பை பெறுவதற்கு ஆங்கில மொழி அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

