UPDATED : மார் 22, 2011 12:00 AM
ADDED : மார் 22, 2011 10:17 AM
அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு புதிய கட்டணம் அறிவிக்கப்பட மாட்டாது என்றும் அந்த குழு தெளிவுபடுத்தியுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக மாவட்ட வாரியாக தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கட்டண நிர்ணயிப்பு குழுத் தலைவர் ரவிராஜ பாண்டியன் விசாரணை நடத்தி வருகிறார். முதல் கட்டமாக நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடந்தது. தற்போது, மெட்ரிக் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், பல பள்ளிகள் மெட்ரிக் பள்ளி இயக்குனரகத்தின் அனுமதி பெறாமலும், அங்கீகாரத்தை புதுப்பிக்காமலும் இயங்கி வருவதை கட்டண நிர்ணயிப்புக் குழு அடையாளம் கண்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தும்போது ஒரு சில கருத்துக்களை குழுத் தலைவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி, அனுமதி பெறாத பள்ளிகள் மற்றும் அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் உள்ள தனியார் பள்ளிகள், உடனடியாக துறையின் அனுமதியைப் பெறவும், அங்கீகாரத்தை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழு வலியுறுத்தியுள்ளது.
அனுமதியையும், அங்கீகாரத்தையும் பெற்றால் மட்டுமே புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. விசாரணையின்போது, அனுமதி மற்றும் அங்கீகாரம் புதுப்பிக்கக் கோரி துறையிடம் விண்ணப்பித்து, நிலுவையில் இருப்பதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிகளின் விண்ணப்பங்களை உடனடியாக ஆய்வுசெய்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு மெட்ரிக் பள்ளி இயக்குனரகத்தை கட்டண நிர்ணயிப்புக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
