UPDATED : மார் 28, 2011 12:00 AM
ADDED : மார் 28, 2011 12:14 PM
தாங்கள் சேர விரும்பும் கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று மீடியா படிப்புக்கு தேவையான டிஜிட்டல் லேப் மற்றும் உபகரணங்கள் உள்ளனவா என்பது குறித்து தெரிந்து கொண்ட பின்னரே, கல்லூரிகளில் சேர வேண்டும் என எஸ்.ஆர்.எம்., பல்கலை விரிவுரையாளர் ராஜேஷ் கூறினார்.
கோவையில் தினமலர் நாளிதழ், எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து நடத்தும் வழிகாட்டி 2011 நிகழ்ச்சியில், "மீடியா துறையில் பெருகி வரும் வேலைவாய்ப்புகள்" என்ற தலைப்பில் எஸ்.ஆர்.எம்., பல்கலை விரிவுரையாளர் ராஜேஷ் பேசியதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் சம்பவங்கள் குறித்து தெரிந்து கொள்ள, அக்காலத்தில் சரியான ஊடகங்கள் இல்லை. தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது எப்படி என்பதே மீடியா ஆகும்.
தகவல் பரிமாற்றம் எளிதில் செய்வது எப்படி, தொழில்நுட்ப மேம்பாடு, ஒரே சமயத்தில் ஒரு செய்தியை பலருக்கு தெரியப்படுத்துவதற்கான வழி உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்ட பாடத்திட்டங்கள் மீடியா படிப்புகளில் உள்ளன. பத்திரிகைத்துறை, விஷூவல் கம்யூனிக்கேஷன், எலக்ட்ரானிக் மீடியா, பிலிம் டெக்னாலஜி என மீடியா துறையில் நான்கு பிரிவுகளில் படிப்புகள் உள்ளன. பத்திரிகைத் துறையில் பணியாற்ற தகவல் பரிமாற்றத்திறன் கொண்டிருப்பதுடன், புதியவற்றை சிந்திக்கும் ஆற்றல் மற்றும் கடின உழைப்புக்கு அவசியம்.
விளம்பரபிரிவு, புகைப்படக்காரர், பிரிண்டிங் அண்ட் பப்ளிக்கேஷன் டிசைன், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரித்தல், திரைப்படம் குறித்த படிப்புகள், அனிமேஷன் உள்ளிட்டவை குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு படிப்புகள் உள்ளன. மீடியா படிப்பு முடிக்கும் மாணவ, மாணவியருக்கு வளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.
இத்தகைய படிப்புகளில் சேரும் முன், தாங்கள் சேர விரும்பும் கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று மீடியா படிப்புக்கு தேவையான டிஜிட்டல் லேப் மற்றும் உபகரணங்கள் உள்ளனவா என்றும் தகுதி மற்றும் திறமை வாய்ந்த பேராசிரியர்கள் பணியாற்றுகிறார்களா என்பது குறித்தும் தெரிந்து கொண்ட பின்னரே, கல்லூரிகளில் சேர வேண்டும்.
மீடியா கல்வி படித்த மாணவ, மாணவியருக்கு இந்தியாவில் செயல்படும், "நாஸ்காம்&' என்ற பன்னாட்டு நிறுவனத்தில் மட்டும் எதிர்வரும் காலங்களில் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. தற்போது, மீடியா துறையின் வளர்ச்சி 62 சதவீதமாக உள்ளது. வரும் 2015ல், அதிக வேலைவாய்ப்பு தரும் துறையாக, இத்துறை விளங்கும். எக்காரணம் கொண்டும் பெற்றோர், உறவினர் அல்லது நண்பர்களின் கட்டாயத்தால், இத்துறையில் கல்வி கற்க வேண்டாம். ஆர்வம் கொண்டவர்கள், இத்துறையில் சேர்ந்து கல்வி கற்றால் எதிர்காலம், வளமாக இருக்கும். இவ்வாறு, விரிவுரையாளர் ராஜேஷ் பேசினார்.
