கல்வியை அடிப்படை உரிமையாக்கும் சட்டம் நிலை எப்படி?
கல்வியை அடிப்படை உரிமையாக்கும் சட்டம் நிலை எப்படி?
UPDATED : ஏப் 11, 2011 12:00 AM
ADDED : ஏப் 11, 2011 12:43 PM
இந்தியாவில் கல்வியை அடிப்படை உரிமையாகும் சட்டம் அமலுக்கு வந்து ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. இந்த கால கட்டத்தில் இந்த சட்டத்தின் செயல்பாடு எப்படி இருந்தது என்பது குறித்த ஓர் ஆய்வினை மத்திய மனித வள அமைச்சகம் மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவுகள் கல்வி அடிப்படை உரிமைச் சட்டம் மிகப் பெரிய வெற்றியாக மாறாத போதும், இந்த முயற்சி வீணான முயற்சியில்லை என்ற உண்மையை வெளிக் கொண்டு வந்துள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்:
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளில் சேர்பவர்களின் மொத்த சேர்க்கை விகிதம் 94.9 சதவிகிதமாக உள்ளது. இதே விகிதம் ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை சேர்பவர்களுக்கு 77 சதவிகிதமாக உள்ளது. மொத்த சேர்க்கை விகிதம் திருப்திகரமாக இருந்த போதும், பள்ளிகளில் சேர்ந்த பின் பள்ளிகளில் இருந்து விலகுபவர்களின் எண்ணிக்கையை உள்ளடக்கவில்லை. இன்னமும் இந்த விகிதம் கவலை தரும் அளவிலேயே உள்ளது.
இந்தியாவில் உள்ள 6 முதல் 14 வயதிலான குழந்தைகளில் மொத்தம் 80 லட்சத்து 43 ஆயிரத்து 889 பேர் எப்போதுமே பள்ளிகளில் சேர்க்கப்படாத பட்டியலில் உள்ளனர். பள்ளிகளில் சேர பல மாணவர்கள் தயாராக இருந்த போதிலும், இன்னமும் இந்தியாவில் பள்ளிகளே இல்லாத பகுதிகள் உள்ளன.
இந்தியாவிலுள்ள ஆரம்பக் கல்லூரி மாணவர்கள் 17 ஆயிரத்து 282 பேர் படிக்கத் தயாராக இருந்த போதும், அவர்கள் வசிக்கும் பகுதிக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனமும் இல்லை என்பது வேதனை அளிக்கும் தகவலாக உள்ளது. இந்தியாவிலுள்ள அரசுப் பள்ளிகளில் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 696 பள்ளிகள் கட்டிடங்களே இல்லாமலும், ஆயிரக்கணக்கான பள்ளிகள் குடி நீர் வசதி இல்லாமலும், 4 லட்சத்து 55 ஆயிரத்து 561 பள்ளிகள் கழிப்பிட வசதி இல்லாமலும் இயங்கி வருகின்றன.
இந்தியாவிலுள்ள ஆரம்பப் பள்ளிகளில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 531 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் தான் உள்ளார். இதன் மூலம் கல்வி அடிப்படை உரிமைச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்துவது குறித்த ஐயம் எழுந்துள்ளது. இந்தியாவில் இது போன்ற பல்வேறு குறைபாடுகள் இருந்தாலும், கல்வி அடிப்படை உரிமைச் சட்டம் மிக மெதுவாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
கல்வி அடிப்படை உரிமைச் சட்டம் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்ற போதும், விரும்பத்தகாத மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பதுதான் ஆறுதலான அம்சமாகும். இந்த சட்டம் இன்னமும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டால் தான் இந்தியாவில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
