அரசுக்கு அவப்பெயர்; சரியான புள்ளி விவரம் தர அறிவுரை
அரசுக்கு அவப்பெயர்; சரியான புள்ளி விவரம் தர அறிவுரை
UPDATED : ஆக 12, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
பழநி: புள்ளி விவரங்கள் சரியாக இல்லாததால் மாணவர்களுக்கு போதிய அளவில் புத்தகங்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் அரசிற்கு அவப்பெயர் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது என, தொடக்க கல்வித்துறை இயக்குனர் கூறியுள்ளார்.
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம்:
ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பாடபுத்தகங்களும், சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு இலவச சீருடையும் வழங்கப்படுகிறது. இதற்காக ஒன்றிய அளவில் தேவை பட்டியல் பெறப்பட்டு, மாவட்ட அளவில், இறுதியாக மாநில அளவில் பாடநூல் தேவை பட்டியல் தயார் செய்யப்படுகிறது.
புத்தக தேவை பாடநூல் கழகத்திற்கும், சீருடை தேவைப்பட்டியல் சமூக நலத்துறைக்கும் அளிக்கப்படுகிறது. ஆனால் இப்புள்ளி விவரங்கள் சரியாகவும், தெளிவாகவும் இல்லாததால் பல நேரங்களில் மாணவர்களுக்கு போதிய அளவில் பாட நூல்களோ அல்லது சீருடையோ கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு, அதனால் அரசிற்கு அவப்பெயர் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் உதவியுடன் பள்ளிவாரியாக சரியான புள்ளி விவரங்களை சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் உரிய நேரத்தில் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் கிடைக்க இப்பட்டியலை சரியாகவும், அடித்தல், திருத்தல் இன்றியும் அளிக்க வேண்டும். இவ்வாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

