‘கடின உழைப்பு இருந்தால் சிறந்த தொழில்முனைவோராக முடியும்’
‘கடின உழைப்பு இருந்தால் சிறந்த தொழில்முனைவோராக முடியும்’
UPDATED : ஆக 13, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: “ கடின உழைப்புக்கு தயாராக இருந்தால் மட்டுமே சிறந்த தொழில் முனைவோராக முடியும்,” என, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இயக்குனர் சுஜித் பானர்ஜி பேசினார்.
கோவை பீளமேட்டில் உள்ள ஜி.ஆர்.டி., அறிவியல் கல்லூரியில், ‘ கல்வி நிறுவனங்களில் தொழில்முனைவோரை உருவாக்குவதல்’ பற்றி, பல்வேறு கல்லூரி ஆசிரியர்களுக்கான மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
இதில் கல்லூரி முதல்வரும், தாளாளருமான பத்மநாபன் பேசுகையில், “சுயதொழில் வளரும் போதுதான், அதிக வேலைவாய்ப்பு உருவாகும். இந்தியாவின் முதுகெலும்பாக சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் திகழ்கின்றன. இன்றைய நிலையில் தொழில்முனைவோர்கள், அறிவியல் மற்ம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய பொருட்களை உற்பத்தி செய்யவே விரும்புகின்றனர்,” என்றார்.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இயக்குனர் சுஜித் பானர்ஜி பேசியதாவது:
கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் புதிய சிந்தனைகள் ஏராளமான இருக்கின்றன. இந்த மாணவர்களை தேர்வு செய்து, அவர்களை தொழில் முனைவோராக மாற்ற முடியும். இதற்கு அவர்களின் சிந்தனைகளை தேர்வு செய்து, ஒரு பொருளாக உருவாக்க வேண்டும். பின் அந்த பொருட்களை வணிக ரீதியாக சந்தைப் படுத்த வேண்டும்.
தொழில்முனைவோராக விரும்பும் மாணவர்களை தேர்வு செய்வது எப்படி, அவர்களின் திட்டம் என்ன, அதை எப்படி செயல்படுத்துவது என்பது பற்றி கல்லூரி ஆசிரியர்கள் அறிந்து கொள்ள, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை பயிற்சி அளிக்கிறது. மேலும் சுயதொழில் துவங்கவுள்ளோருக்கு, நிதியமைப்புகளிடம் இருந்து நிதியுதவி பெற்றுத்தரவும் செய்கிறது.
கடின உழைப்புக்கு தயாராக இருந்தால் மட்டுமே, சிறந்த தொழில் முனைவோராக திகழ முடியும். ஒரு வெற்றிக்கு பின், பல தோல்விகள் உள்ளன என்பதே உண்மை. முதலில் திட்டமிட்டு, இலக்கை அடைய கடும் முயற்சி எடுக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி கிட்டும். இவ்வாறு சுர்ஜித் பானர்ஜி பேசினார்.
முன்னதாக இந்த பயிற்சியை கொடிசியா தலைவர் இளங்கோ துவக்கி வைத்தார். இப்பயிற்சியில் 100க்கும் அதிகமான கல்லூரி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

