மருத்துவ நுழைவுத் தேர்வு : தமிழக அரசு பதில் மனுதாக்கல்
மருத்துவ நுழைவுத் தேர்வு : தமிழக அரசு பதில் மனுதாக்கல்
UPDATED : ஏப் 22, 2011 12:00 AM
ADDED : ஏப் 22, 2011 03:32 PM
இந்தியாவில் எம்.பி.பி.எஸ். மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர, அனைத்திந்திய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவெடுத்து அறிவித்தது.
ஏற்கனவே, பொது நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்க வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இதையடுத்து, தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்டு, மருத்துவக் கவுன்சிலின் அறிவிப்பிற்கு தடை விதித்தது. அந்த தடையை நீக்கக் கோரி மருத்துவக் கவுன்சில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், பொது நுழைவுத் தேர்விற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தற்போது தமிழக அரசு பதில் மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
பதில் மனுவில், மருத்துவ படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்துவது என்பது சிரமமானது. அதனால் வீண் குழப்பமும், பிரச்சினையும் ஏற்பட்டு மாணவர்களின் நலன்தான் பாதிக்கப்படும். எனவே, மருத்துவ படிப்புக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்துவதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது.
அரசின் பதில் மனுவை ஏற்று, நுழைவுத் தேர்வு நடத்தும் வகையில் மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பிற்குத் தடை விதித்து மாணவர்களுக்கு சமூக நீதி கிடைத்திடும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.ஜோதிமணி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
