UPDATED : ஏப் 23, 2011 12:00 AM
ADDED : ஏப் 23, 2011 10:23 AM
சென்னை: உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப். 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. புத்தகங்கள் படிப்பதை அதிகரித்தல், புதிய புத்தகங்கள் வெளியாக உதவுதல், பதிப்புரிமை பெறுதல் போன்ற செயல்களை ஊக்குவிக்க இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நாள் "யுனெஸ்கோ" (யுனைடெட் நேஷன்ஸ் எஜூகேஷனல், சயின்டிபிக் அண்டு கல்ச்சுரல் ஆர்கனைசேஷன்) அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஷேக்ஸ்பியர், செர்வாண்டிஸ் போன்ற புகழ்பெற்ற இலக்கியவாதிகள், 1616, ஏப். 23ல் மறைந்தனர். இலக்கியத்தில் இவர்களது பங்களிப்பை போற்றும் வகையில் ஏப். 23ம் தேதியை "உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாக" யுனஸ்கோ அறிவித்தது. இதன்படி 1995ம் ஆண்டு முதல் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகளவில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடுகின்றன. இந்த நாளின் மற்றொரு நோக்கம், இளைய தலைமுறையினரும் புத்தகங்கள் படிப்பதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான். இந்த நாளில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சிகள், புதிய புத்தகங்களை வெளியிட்டு அறிமுகம் செய்தல், சிறப்பு கலந்துரையாடல் கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மேலும் சிறப்பான புத்தகங்களை எழுதும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பாராட்டு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படும். இந்தியாவில் இந்த நாளை இன்னும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எண்ணமாக உள்ளது. குறிப்பாக மாணவர் சமுதாயம் பயன்பெறும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்த நாளை கொண்டாட வேண்டும் என கல்வியாளர்கள் விரும்புகின்றனர்.
