மருத்துவ கவுன்சிலிங்கில் தாமதமில்லை: தமிழக அரசு மறுப்பு
மருத்துவ கவுன்சிலிங்கில் தாமதமில்லை: தமிழக அரசு மறுப்பு
UPDATED : ஆக 13, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: ‘மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் நடத்துவதில் காலதாமதம் என்று சொல்வதில் எவ்வித அடிப்படை உண்மையும் கிடையாது’ என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, மருத்துவ இளநிலை, முதுநிலை படிப்பு மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கான மாணவர்களை கல்லூரிகளில் சேர்ப்பதற்கான காலஅட்டவணையை அகில இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களும், இந்த அட்டவணைப்படி கவுன்சிலிங் நடத்தி, மாணவர்களை கல்லூரிகளில் சேர்க்கின்றன. இந்த ஆண்டு முதற்கட்ட கவுன்சிலிங் ஜூலை 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடத்தப்பட்டு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அவ்வாறு அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழகத்தில், நடத்தப்பட்ட பொறியியல் கவுன்சிலிங் மூலம் பொறியியல் கல்லூரிகளில், சேர விருப்பப்பட்டு, மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளிலிருந்து தன்னிச்சையாக வெளியேறியதால், காலியிடங்கள் உருவாகின.
அந்த காலியிடங்களுக்கும், புதிதாக அனுமதி பெறப்பட்ட தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் சேர்ந்து இரண்டாம்கட்ட கவுன்சிலிங் ஆகஸ்ட் 11ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
ஆகஸ்ட் 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கை நடத்திக்கொள்ள அகில இந்திய மருத்துவக் கவுன்சிலிங் தேதி நிர்ணயித்துள்ளது. ஆனால், மாணவர்கள் நலன் கருதி, உரிய காலத்தில் பாடங்களைத் தொடங்கவும், மாணவர்கள் புதிய சூழ்நிலைக்கு தயாராகவும் இரண்டாம் கட்ட கவுன்சிலிங், தமிழகத்தில் முன்னதாகவே தொடங்கப்பட்டுள்ளது.
இதில் எந்தவித கால தாமதமும் கிடையாது. மேலும் அகில இந்திய மாணவர்களுக்கான ஒதுக்கீட்டிலிருந்து, தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேராத மாணவர்கள் பற்றிய விவரம் ஆகஸ்ட் 25ம் தேதி தான் முடிவாகும்.
இதனால், ஏற்படும் காலியிடங்களையும் சேர்த்து கவுன்சிலிங் நடத்தினால் தான், அரசு இடங்கள் நிறைவடையும். அதன் பின்னர் தனியார் கல்லூரிகளுக்கு கவுன்சிலிங் நடைபெறும். கடந்த காலத்திலும், இதே கால அட்டவணைப்படி தான் மருத்துவ படிப்புக்கு கவுன்சிலிங் நடைபெற்றன.
எனவே, மருத்துவ படிப்புகளுக்கு கவுன்சிலிங் நடத்துவதில், காலதாமதம் என்று சொல்வதில் எவ்வித அடிப்படை உண்மையும் கிடையாது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

