‘தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீடு புதிய திட்டம்’
‘தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீடு புதிய திட்டம்’
UPDATED : ஆக 14, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: ‘தனியார் மருத்துவக் கல்லூரிகள் துவங்க அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கும் போது, ஒரு குறிப்பிட்ட சதவீத இடங்களை அரசுக்கு வழங்க வேண்டும் என்று ஏன் கட்டுப்பாடு விதிக்கக்கூடாது?’ என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
உயர்கல்வியில், சமுதாயத்தில் அடிமட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோருக்கு சமவாய்ப்பு கிடைப்பதில்லை. அரசே சொந்தமாக மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரிகள் நடத்தும்போது, இப்பிரிவினருக்கு வாய்ப்புகளை உறுதி செய்ய முடியும். தனியார் நடத்தும்போது, மாணவர்களுக்கு இடம் கிடைக்காதது மட்டுமல்ல, செலவும் அதிகமாகும். இதனாலேயே அரசு கல்லூரிகளை தனியார்மயமாக்க வேண்டாமென்று வற்புறுத்தி வருகிறேன்.
செட்டிநாடு மருத்துவக் கல்லூரி, பல்கலைக்கழகமாக மாறிவிட்டதால், கடந்த ஆண்டு அவர்கள் அரசுக்கு வழங்கிய 85 இடங்கள் இந்த ஆண்டு இல்லாமல் போய்விட்டன. இடஒதுக்கீடு முறையையும் அமல்படுத்த முடியாமல், அரசு இனி வேண்டுகோள் தான் விடமுடியும்.
கடந்தாண்டு தமிழக அரசு ஐந்து மருத்துவக் கல்லூரிகள் துவங்க தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது. எந்த அடிப்படையில் அரசு தடையில்லாச் சான்றிதழ் வழங்குகிறது என்பது தெரியவில்லை.
அத்தகைய சான்றிதழ்கள் வழங்கும்போது, ஒரு குறிப்பிட்ட சதவீத இடங்களை அரசுக்கு வழங்க வேண்டுமென்று ஏன் கட்டுப்பாடு விதிக்கக் கூடாது? சில மாநிலங்களில் நிபந்தனையோடு தடையில்லா சான்றிதழ் வழங்கப்படுவது தமிழக அரசுக்கு மட்டும் தெரியாமல் போய்விட்டதா? அல்லது தெரிந்தே மறைத்துள்ளார்களா? முன்பு நான் சொன்னபோது, உயர்கல்வித்துறை அமைச்சர் பல மறுப்பு அறிக்கைகள் வெளியிட்டார்.
இன்று அரசே தனியார் வாசலில், இழந்த மருத்துவ இடங்களை பெற காத்துக்கிடப்பதிலிருந்து நான் சொன்னது சரியாகிவிட்டது. ஏழை, எளிய மக்களை எத்தனை காலத்திற்குத் தான் ஏமாற்றுவது? இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

