சமச்சீர் கல்வி 8, 9ம் வகுப்பு புத்தகங்கள் இணையதளத்தில் வெளியீடு
சமச்சீர் கல்வி 8, 9ம் வகுப்பு புத்தகங்கள் இணையதளத்தில் வெளியீடு
UPDATED : மே 05, 2011 12:00 AM
ADDED : மே 05, 2011 10:55 AM
சமச்சீர் கல்வி திட்டத்தில் தயாரிக்கப்பட்ட, எட்டாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகங்கள், பாடநூல்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டன. சில வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள், ஓரிரு நாட்களில் வெளியிடப்பட உள்ளன.
வரும் ஜூனில், அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி பாடத் திட்டங்கள் அமலுக்கு வருகின்றன. இதற்கான பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி நடந்து வரும் நிலையில், அதற்கு முன்னதாக, பாட நூல்கழக இணையதளத்தில், வகுப்பு வாரியாக பாடப் புத்தகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, 10ம் வகுப்பு பாடப் புத்தகங்கள் வெளியிடப்பட்ட நிலையில், நேற்று, எட்டாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகங்கள், இணையதளத்தில் ( www.textbooksonline.tn.nic.in ) வெளியிடப்பட்டன. மேலும், சில வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள், ஓரிரு நாட்களில் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன.
ஜெராக்ஸ் கடைகளில் பணமழை: சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வெளிவராத நிலையில், அவை, இணையதளத்தில் மட்டும் வெளியிடப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகள், முன்கூட்டியே பாடப் புத்தகங்களின் நகல்களைப் பெற்று, பாடம் நடத்தி வருகின்றன. குறிப்பாக, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, பல பள்ளிகளில் பாடம் நடத்தப்பட்டு வருகின்றன.
