UPDATED : டிச 24, 2024 12:00 AM
ADDED : டிச 24, 2024 08:55 PM
பல்லாரி:
கர்நாடகாவில் முதன் முறையாக ஒரு திருநங்கை, பல்லாரியின் ஸ்ரீ கிருஷ்ண தேவராய பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக நியமிக்கப்பட்டார். இவர் பாடம் நடத்தும் திறன், மாணவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
திருநங்கைகளை சமுதாயம் வேறு கோணத்தில் பார்க்கிறது. அறுவருப்புடன் நடத்தப்படுகின்றனர். சமுதாயம் மட்டுமின்றி, இவர்களை பெற்றோரும் கூட ஒதுக்கி தள்ளுகின்றனர். வீட்டை விட்டு துரத்துகின்றனர். ஆனால் பல சவால்கள், தடைகளை கடந்து திருநங்கைகள் வெளி உலகுக்கு வந்து சாதனை செய்கின்றனர். ஒரு திருநங்கை, பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விவசாயி மகன்
பல்லாரி, குருகோடுவை சேர்ந்தவர் ரேணுகா பூஜாரி, 35.. திருநங்கையான இவர், தற்போது முற்றிலும் பெண்ணாக மாறியுள்ளார்.
விவசாயி மல்லையா, திப்பம்மா தம்பதியின் மகனான இவருக்கு மல்லேஷ் என, பெயர் இருந்தது. பள்ளி நாட்களில் திருநங்கை என்பதை உணர்ந்த பின், ரேணுகாவாக பெயர் மாற்றம் செய்து கொண்டார். சொந்த ஊரில் உயர்நிலை பள்ளி படிப்பை முடித்தார்.
பல்லாரியின் மாநகராட்சி கல்லுாரியில் பி.யு.சி., முடித்து, அரசு பட்டப்படிப்பு கல்லுாரியில் அட்மிஷன் பெற்றார். பல நெருக்கடிகள், சவால்களை கடந்து கன்னடத்தில் முதுகலை படிப்பை முடித்தார்.
தற்போது பல்லாரி பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியையாக நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில் இந்த பதவிக்கு வந்த முதல் திருநங்கை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு ஒதுக்கீடு
கல்லுாரியில் கன்னட பேராசிரியையாக சிறப்பாக பாடம் நடத்துகிறார். பணிக்கு வந்த சில நாட்களிலேயே, மாணவர்களுக்கு பிடித்தமான பேராசிரியை என்ற பெயர் பெற்றுள்ளார். பல்கலைக்கழக நியமனத்தில், ஒரு சதவீதம் திருநங்கைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி ரேணுகா பூஜாரிக்கு வாய்ப்பு கிடைத்தது.
ரேணுகா பூஜாரி கூறியதாவது:
பல ஏற்ற, இறக்கங்களை கடந்து இந்த பதவிக்கு வந்திருப்பது, எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கீழே விழுந்து மேலே எழும் போது, என்ன மகிழ்ச்சி ஏற்பட்டதோ, அதே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பல்லாரி பல்கலைக்கழகம் என்னை கைப்பிடித்து துாக்கி நிறுத்தியது.
கடந்த 2022ல், எம்.ஏ., பட்டப்படிப்பை முடித்தேன். 2024ல் கவுரவ பேராசிரியையாக நியமிக்கப்பட்டேன்.
அரசு கல்லுாரியில் பேராசிரியையாக நியமிக்கப்பட, தேர்வுகளுக்கு ஆஜராவேன். எங்கள் சமுதாயத்தினர் பிச்சை எடுப்பதை விட்டு விட்டு, படிப்பை தொடர வேண்டும். நல்ல பதவியில் அமரும்படி வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தடைகளை தாண்டி பேராசிரியை ஆன ரேணுகா பூஜாரிக்கு போடலாம் ஒரு ராயல் சல்யூட்.