UPDATED : டிச 24, 2024 12:00 AM
ADDED : டிச 24, 2024 08:58 PM
பெங்களூரு:
பெங்களூரு புத்தகத்திருவிழாவில், நம்ம ஊரு தமிழ் மக்கள் குழுவினர் சார்பில் பல்வேறு நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
தமிழர்களின் இசையான பறையை வைத்துக் கொண்டு புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவகோனே..., பிள்ளை தமிழ் மொழி அமுது, ஓடி விளையாடு பாப்பா, ஜல்லிக்கட்டு, சங்கே முழங்கு, ஆளப்போறான் தமிழன் ஆகிய பாடல்களுக்கு மாணவ - மாணவியர் நடனமாடினர்.
தாயும் - மகளும் சேர்ந்து சின்னஞ்சிறு கிளியே என்ற பாடலுக்கு நடனமாடியதற்கு, பலரும் பாராட்டுத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்டத்தை மாணவியர் செய்தது, பெருமையாக இருந்தது.
* புத்தகம் வெளியீடு
தொடர்ந்து, பாவலர் கல்யாண் குமார் எழுதிய சத்திய வெளிச்சம் என்ற நுாலை, சத்யசாய் எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை நிறுவனர் ராஜகோபால பாலாஜி வெளியிட, தமிழகம் செங்கம் முன்னாள் எம்.எல்.ஏ., பாவலர் நன்னன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பேராசிரியை கார்த்தியாயினி பேசியதாவது:
வாழ்வு முழுவதும் தன்னுடைய அன்பு வாழ்க்கையால் போராட்ட வடிவத்தை காட்டி, நாட்டின் சுதந்திரத்திற்கு வித்திட்டவர் மகாத்மா காந்தி. அவர் குறித்த நுாலை, இன்றைய மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டும். காந்தி பற்றி, மாணவர்களுக்கு பாட புத்தகத்தில் ஏதோ இரண்டு பக்கம் பாடம் சொல்லிக் கொடுப்பதோடு நின்று விடுகிறது.
ஆனால், அதையே கவிதை நடையில், எளிதில் வாசிக்க கூடிய அளவில் சிறந்த புத்தகம் கிடைத்தால், அந்த வாசிப்பில் காந்தியின் வாழ்க்கை மட்டுமல்ல, அழகு தமிழில் இன்பத்தையும் சுவைக்க முடியும். இதற்கு, கல்யாணகுமார் எழுதிய சத்திய வெளிச்சம் புத்தகம் சிறந்த சான்றாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாழ்த்து
சத்யசாய் எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை நிறுவனர் ராஜகோபால பாலாஜி பேசியதாவது:
சத்திய வெளிச்சம் புத்தகத்தை இன்னும் படிக்கவில்லை. ஆனால் மகாத்மா காந்தி பற்றி சில வார்த்தைகள் பேச விரும்புகிறேன். இந்த உலகில் 'மகாத்மா' என்ற பெயர் பெற்ற ஒருவர், காந்தி மட்டுமே.
காந்தியின் தீவிர பக்தர் எம்.ஜி.ஆர்., தனது திருமணத்தின் போது, பட்டு வேஷ்டி கொடுத்த போதும், அதை மறுத்து, கதர் ஆடை தான் உடுத்துவேன் என்று உடுத்தி திருமணம் செய்து கொண்டவர்.
பார்லிமென்ட் வளாகத்தில், 16 அடி உயரத்தில் மஹாத்மா காந்தி சிலை வைக்கப்பட்டு உள்ளது. நம் நாட்டில் மகாத்மா சிலை இருப்பது பெரிய விஷயமல்ல. அமெரிக்காவுக்கு ஒரு முறை கூட செல்லாத மகாத்மாவுக்கு, அவர்கள் கொடுக்கும் மரியாதை, இந்த உலகில் யாரும் கொடுக்க முடியாது.
இதுபோன்று டென்மார்க், தெற்கு ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, உகாண்டா என பல நாடுகளில் அவரின் சிலைகள் உள்ளன. இந்த உலகம் உள்ள வரை, அவரை யாராலும் மறக்க முடியாது.
தமிழகத்தில் புத்தக திருவிழா நடத்துவது பெரிய விஷயமல்ல. ஆனால் அண்டை மாநிலமான கர்நாடகாவில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தமிழ் புத்தக திருவிழா நடப்பது தான் முக்கியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஸ்ரீராமபுரம் லிட்டில் பிளவர் பள்ளி முதல்வர் மதுசூதனபாபு பேசியதாவது:
காந்தியை பற்றி புத்தகத்தில் சிறப்பாக எளிமையான முறையில் எழுதப்பட்டுள்ளது. அனைவரும் அதை பெற்று படித்து பயன்பெற வேண்டும். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, இமயமும் குமரியும் இருக்கிற வரைக்கும் இவ்வுலகில் அவர் பெயர் சிறக்கும் என்று காந்தி பற்றி கூறுவார்.
இத்தகைய நுாலை வெளியிட வாய்ப்பு அளித்த பாவலருக்கு நன்றி. இன்றைய சூழ்நிலையில் காந்தி மறுக்கப்பட்டால் பரவாயில்லை என்று சொல்லலாம். ஆனால் சித்தாந்த கொள்கை ரீதியில் மறைக்கப்படுகிறார் என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பாவலர் நன்னன், முன்னாள் எம்.எல்.ஏ., தி.மு.க., செங்கம்: நான் சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில், ஐந்து ஆண்டு எம்.எல்.ஏ.,வாக இருந்தேன். செந்தமிழ் நாடெனும் போதினிலே தேன் வந்து பாயுது காதினிலே என்று பாரதியார் கூறியபோன்று, என் காது இனிக்கிறது. அனைவரும் ஒற்றுமையைஉருவாக்கி, நல்ல வளமோடு வாழ வேண்டும்.
பாவலர் கல்யாண் குமார்: காந்தியின் சரித்திரத்தை கவிதை நடையில் எழுத வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. வன்முறை, பிரிவினை, அராஜகம், ஏமாற்றுதல், ஊழல் என எங்கும் நிறைந்திருக்கிற காட்சிகளை பார்க்கிறேன். அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு அடித்தளத்திலும் தத்துவங்களை எல்லாம் கவிதை வடிவிலே கொண்டுவர முயற்சி செய்திருக்கிறேன்.