பிரிவினைவாதம், பயங்கரவாதத்தை துாண்டும் 25 புத்தகங்களுக்கு காஷ்மீர் அரசு தடை
பிரிவினைவாதம், பயங்கரவாதத்தை துாண்டும் 25 புத்தகங்களுக்கு காஷ்மீர் அரசு தடை
UPDATED : ஆக 08, 2025 12:00 AM
ADDED : ஆக 08, 2025 06:19 PM

ஸ்ரீநகர்:
அருந்ததி ராய், மவுலானா மவுதாதி, டேவிட் தேவதாஸ் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களின், 25 புத்தகங்களுக்கு ஜம்மு - காஷ்மீர் அரசு தடை விதித்துள்ளது. பொய் புரட்டுகளையும், பிரிவினைவாதத்தையும் ஊக்குவிப்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை முஸ்லிம் எழுத்தாளரும், ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் நிறுவனருமான மவுலானா மவுதாதி எழுதிய, அல் ஜிஹாதுல் பில் இஸ்லாம்; ஆஸ்திரேலிய எழுத்தாளர் கிறிஸ்டோபர் ஸ்னெட்டன் எழுதிய, இண்டிபென்டென்ட் காஷ்மீர்.
டேவிட் தேவதாஸ் எழுதிய, இன் சேர்ச் ஆப் ஏ ப்யூச்சர் - காஷ்மீரின் கதை; விக்டோரியா ஸ்கோபீல்டு எழுதிய, காஷ்மீர் இன் கான்ப்ளிக்ட்; ஏ.ஜி.நுாராணி எழுதிய, தி காஷ்மீர் டிஸ்ப்யூட் மற்றும் அருந்ததி ராய் எழுதிய, ஆசாதி உள்ளிட்ட, 25 புத்தகங்களு க்கு இந்த தடை விதிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து ஜம்மு - காஷ்மீர் அரசு வெளியிட்ட அறிக்கை:
குறிப்பிட்ட சில இலக்கியங்கள் பொய் புரட்டுகளுடன், பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தையும் துாண்டும் வகையில் இருப்பதாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், வன்முறை மற்றும் பயங்கரவாதத்தில் இளைஞர்கள் ஈடுபடுவதற்கு இந்த இலக்கியங்கள் முக்கிய பங்கு வகிப்பது தெரியவந்துள்ளது.
மூளைச்சலவை பயங்கரவாதம் மற்றும் வன்முறை எண்ணங்களை விதைத்து இளைஞர்களை தேசத்திற்கு எதிராக திருப்பும் வகையில், இந்த புத்தகங்களில் பல பொய் புரட்டுகள் எழுதப்பட்டு உள்ளன.
மத அடிப்படைவாதம், வன்முறை, பயங்கரவாதத்தை உயர்த்தி பிடிப்பது, பாதுகாப்பு படைகளை எதிரியாக நினைக்க வைப்பது என இளைஞர்களை மூளைச் சலவை செய்து, அவர்கள் தவறான வழியை தேர்ந்தெடுப்பதற்கு இந்த புத்தகங்கள் துாண்டுகோலாக இருக்கின்றன.
அடையாளம் காணப்பட்ட இந்த 25 புத்தகங்களும் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை விளைவிப்பதுடன், பிரிவினைவாதத்தையும் துாண்டுகின்றன.
எனவே, இந்த 25 புத்தகங்களுக்கும் தடை விதிப்பதுடன், அதன் பிரதிகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.