பிரதமரின் மாபெரும் ஜவுளி பூங்கா விருதுநகரில் விரைவாக துவக்கப்படுமா
பிரதமரின் மாபெரும் ஜவுளி பூங்கா விருதுநகரில் விரைவாக துவக்கப்படுமா
UPDATED : ஆக 08, 2025 12:00 AM
ADDED : ஆக 08, 2025 06:21 PM

சென்னை:
மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில், விருதுநகரில் பிரதமரின் மாபெரும் ஜவுளி பூங்கா அமைக்கும் பணியை, சிப்காட் நிறுவனம் விரைவில் துவக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரத்தில், 'பி.எம்.மித்ரா' எனப்படும் பிரதமரின் மாபெரும் ஜவுளி பூங்காவை, 1052 ஏக்கரில், 1894 கோடி ரூபாயில் அமைக்க, தமிழக அரசுக்கு, மத்திய ஜவுளி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இடையே, 2023 மார்ச்சில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பூங்கா உள்கட்டமைப்பு பணிகளுக்கு, மத்திய அரசு, 500 கோடி ரூபாய் மானியம் வழங்குகிறது.
இப்பூங்கா வாயிலாக, 10,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கவும், ஒரு லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, 13 லட்சம் சதுர அடியில், பிளக் அண்ட் பிளே எனப்படும், தயார்நிலை தொழிற்கூடம், 10,000 படுக்கைகளுடன் தங்குமிடம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.
ஜவுளி பூங்கா அமைக்கும் பணியை, சிப்காட் எனப்படும், தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் மேற்கொள்ள வேண்டும்.
மத்திய அரசிடம் இருந்து அனைத்து அனுமதிகளும் கிடைத்து விட்ட நிலையிலும், ஜவுளி பூங்கா அமைக்கும் பணிகள் துவக்கப்படவில்லை. அந்த பணிகள் விரைவாக துவக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, தொழில் துறையினரிடம் எழுந்துள்ளது.
இதுகுறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறியதாவது:
விருதுநகர் ஜவுளி பூங்காவை, தயார் நிலை தொழிற்கூடம், சூரியசக்தி மின்சாரம், மழைநீர் வடிகால், கழிவு நீர் சுத்திகரிப்பு, கழிவு பொருட்களை அகற்றுவது உள்ளிட்ட வசதிகளுடன், பசுமை பூங்காவாக அமைக்க வேண்டும்.
இந்தியா - பிரிட்டன் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தால், தமிழகத்தில் உள்ள ஜவுளி நிறுவனங்களுக்கு அதிக ஆர்டர்கள் கிடைக்கும்.
அதற்கு ஏற்ப, புதிய ஆலைகள் அமைக்க வசதியாக, விருதுநகர் ஜவுளி பூங்கா பணிகளை விரைவாக துவக்க வேண்டும். அங்கிருந்து துாத்துக்குடி துறைமுகம் வாயிலாக, ஏற்றுமதி செய்ய வசதியாக இருக்கும் என்றார்.
தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஜவுளி பூங்கா பணிகளுக்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி முடிவடைந்து விட்டது. முதலில் உள்கட்டமைப்பு பணியை துவக்க, விரைவில், 'டெண்டர்' கோரப்பட உள்ளது. அடுத்து, தயார்நிலை தொழிற்கூடம், தங்குமிட வசதி என, ஒவ்வொரு பகுதியாக பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.