கல்வி கண் திறப்பு விழாவில் 'அ'னா... 'ஆ'வன்னா எழுதிய மழலையர்
கல்வி கண் திறப்பு விழாவில் 'அ'னா... 'ஆ'வன்னா எழுதிய மழலையர்
UPDATED : அக் 03, 2025 10:01 AM
ADDED : அக் 03, 2025 10:03 AM
பெங்களூரு:
பெங்களூரில் முதன் முறையாக, 'தினமலர்' நாளிதழ் நடத்திய வித்யாரம்பம் விழாவில், மழலையர் கையை பிடித்து விழாவின் சிறப்பு விருந்தினர்கள் 'அ' னா... 'ஆ'வன்னா எழுத வைத்ததை பார்த்து, பெற்றோர் ஆனந்த மழையில் நனைந்தனர்.
வித்யாரம்பத்துக்கு உகந்தது விஜயதசமி தினம். பள்ளிக்கு செல்லும் வயதை எட்டிய குழந்தைகளுக்கு, அன்றைய தினம் அரிசி, நெல் மணியில் 'அ னா ... ஆ வன்னா' எழுத சொல்லி கொடுப்பர். தமிழகம் முழுதும் பல ஆண்டுகளாக நடந்து வரும் வேளையில், பெங்களூரில் முதன் முறையாக சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் நேற்று நடத்தப்பட்டது.
தமிழ் தாய் வாழ்த்து முன்பதிவு செய்திருந்த பெற்றோர், காலை 8:00 மணியில் இருந்தே குழந்தைகளை அழைத்து கொண்டு ஆர்வமாக வந்தனர். நுழைவுவாயில் பகுதியில் தங்கள் குழந்தையின் பெயரை பதிவு செய்து இருக்கைகளுக்கு சென்று அமர்ந்தனர்.
காலை 8:45 மணிக்கு, கோவிலின் தலைமை அர்ச்சகர் ராஜா பாலசந்திர சிவம் கணபதி பூஜை, காயத்ரி, ஹயக்ரீவா, சரஸ்வதி பூஜை நடத்தினார். குழந்தைகளுடன் வந்திருந்த பெற்றோர் அமைதியுடன் தரிசனம் செய்தனர். நேற்று, 'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் 117 வது பிறந்த நாள் என்பதால், அவரது படத்திற்கும் மாலை அணிவித்து மலர் துாவி வணங்கினர்.
சிறப்பு விருந்தினர்களான மூத்த தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், பெங்களூரு குடிநீர், வடிகால் வாரிய தலைவருமான ராம்பிரசாத் மனோகர், பல விருதுகளை பெற்ற பிளாஸ்டிக் சர்ஜன் டாக்டர் எஸ்.ஏ.சுப்பிரமணியன், ராஜிவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழக நர்சிங் கல்வி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் கஸ்துாரி தாமோதரன், தமிழ் பேராசிரியர் முனைவர் வி.சரளா, பெங்களூரு தமிழ் சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன் ஆகியோர் முன்னிலையில் தமிழ் தாய், கன்னட மொழி வாழ்த்து பாடல்கள் பாடப்பட்டன.
விரலி மஞ்சள் இதையடுத்து, குழந்தைகளை அ...னா, ஆ வன்னா எழுத வைக்கும் வித்யாரம்பம் கோலாகலமாக துவங்கியது. ஐந்து குழந்தைகளாக பெயர் சொல்லி விழா மேடைக்கு அழைக்கப்பட்டனர். குழந்தைகள் கையை பிடித்து, நெல்மணியில், விரலி மஞ்சளை வைத்து சிறப்பு விருந்தினர்கள் எழுத வைத்தனர்.
தங்கள் பிள்ளைகள் எழுதுவதை பார்த்து பெற்றோரும் மெய்சிலிர்த்தனர். குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கி சிறப்பு விருந்தினர்கள் குதுாகலித்தனர்.
இதை புகைப்படம் எடுத்து ஐந்தே நிமிடத்தில், 'இன்ஸ்டன்ட் போட்டோ'வாக பெற்றோரிடம் கொடுக்கப்பட்டது. இந்த புகைப்படம், 'தினமலர்' வழங்கிய சான்றிதழ்களில் ஒட்டி அவர்களிடமே கொடுக்கப்பட்டன.
நுழைவுவாயில் பகுதியில் இருந்த, 'தினமலர் செல்பி பாயின்ட்'டுக்கு சென்று, குழந்தைகளுடன், பெற்றோர் தங்கள் மொபைல் போன்களில் உற்சாகமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அனைவருக்கும் பிஸ்கட், டீ, காபி, பாதாம் பால், ஸ்வீட் வழங்கப்பட்டது.
ஐ.ஏ.எஸ்., ராம்பிரசாத் மனோகர், தனது சொந்த செலவில், குழந்தைகளுக்கு, தலா 1,000 ரூபாய் மதிப்பிலான, 'லேர்னிங் கிட்' வழங்கினார்.
எனது பாக்கியம்
சாயா தேவி, சாமுண்டிநகர், ராஜாஜிநகர்:
வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு முதலில் வாசிக்கப்பட்டது எனது பெயர் தான். நான் அதிகம் படிக்கவில்லை. என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. சிறப்பு விருந்தினர்கள், குழந்தைகள் கையை பிடித்து எழுத வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதை பாக்கியமாக கருதுகிறேன்.
கீர்த்தி, பாரதி நகர்:
நிகழ்ச்சியில், இரட்டையரான எனது இரண்டு மகள்களும் மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து ஓடி, ஆடி விளையாடினர். இதை பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது. இந்த காலத்தில் ஒரு ரூபாய் கூட வாங்காமல், எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு நிகழ்ச்சி நடத்திய தினமலருக்கு இதய பூர்வமான நன்றி.
தாய்: இந்திரா, மகன்: கார்த்திகேயன் பாட்டி: ஜெயதேவி - விவேக் நகர்: என் மகன் அதிர்ஷ்டசாலி. தன் முதல் எழுத்தையே, அதிகாரிகள் மூலம் எழுதி உள்ளான். இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒரு ரூபாய் கூட வசூலிக்காமல் நிகழ்ச்சி நடத்திய தினமலருக்கு கோடான கோடி நன்றி. எவ்வளவு பணம் கொடுத்தாலும் சில விஷயங்கள் கிடைக்காது; அது போல தான் இந்நிகழ்ச்சியும். இதை தொடர வேண்டும்.
ரித்திகா, பின்னிபேட், மாகடி ரோடு:
வித்யாரம்பம், மறக்க முடியாத அனுபவம். என் குழந்தைக்கு மிகப்பெரிய ஆசிர்வாதம் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. நான் பிறந்து, வளர்ந்தது பெங்களூரு என்றாலும் எனக்கு தமிழ் படிக்க, எழுத நன்கு தெரியும். எனது குழந்தைக்கும் சொல்லி கொடுப்பேன். அந்துமணியின் கேள்வி - பதில் பகுதியை விரும்பி படிப்பேன்.
கார்த்திக், என்.ஆர்.ஐ., லே - அவுட், ராமமூர்த்திநகர்:
வித்யாரம்பம் நிகழ்ச்சியை அருமையாக ஏற்பாடு செய்திருந்த, 'தினமலர்' நிர்வாகத்திற்கு எனது நன்றி. சிறப்பு விருந்தினர்களிடம் இருந்து, இந்நாட்டின் எதிர்கால தலைமுறையினருக்கு வாழ்த்துகள் கிடைத்து இருக்கிறது. ஆண்டிற்கு ஒரு முறை, குழந்தைகளுக்கான கலை, கலாசார நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்பது எனது விருப்பம்.
ஓடி விளையாடிய மழலையர்
* பூஜைகளை பிரகாஷ் சுவாமிகள், சோமேஷ் ஆகியோர் இணைந்து நடத்தினர். தலைமை அர்ச்சகர் சார்பில், காயத்ரி, ஹயக்ரீவா, சரஸ்வதி பூஜைக்குரிய மந்திரங்கள் அடங்கிய வாழ்த்து அட்டை வழங்கப்பட்டது.
* சிறப்பு விருந்தினர்களுடன் இணைந்து, நிகழ்ச்சியில் பங்கேற்றோர் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.
*நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகள், பலுானை வைத்து விளையாடியும், ஓடி, ஆடி விளையாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
*முன்பதிவு செய்யாதவர்கள் கூட கடைசி நேரத்தில் வந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
*விழா நுழைவு வாயில் முகப்பில் பலுான்களால் வண்ண அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
*விழாவிற்கு வந்திருந்த நன்கொடையாளர்கள் ஆலய டிரஸ்டி மோகன், மாநில தி.மு.க., பொருளாளர் தட்சிணாமூர்த்தி, பெங்களூரு தமிழ் சங்க துணை செயலர் பாரி சுப்பிரமணியன் கவுரவிக்கப்பட்டனர். நன்கொடையாளர்கள் 'ஸ்ட்ரக்ட்' டிஜிட்டல் நிர்வாக இயக்குனர் ராதாகிருஷ்ணா பாலசுந்தரம், சி.இ.ஓ., மற்றும் நிறுவனர் மனோஜ் பாலா வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
*விழா நிகழ்ச்சிகளை, தங்கவயல் ஜெயசீலன் தொகுத்து வழங்கினார்.