UPDATED : ஜன 17, 2025 12:00 AM
ADDED : ஜன 17, 2025 11:37 AM
பெ.நா.பாளையம்:
துடியலூர் அருகே உள்ள கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியில், 17வது பட்டமளிப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலாளர் வாசுகி தலைமை வகித்தார். இதில், கத்தார் தோஹா வங்கியின் முன்னாள் முதன்மை நிர்வாக அதிகாரி சீதாராமன் பேசுகையில், எல்லாவற்றையும் விட கல்வியே மேலானது. இளம் பருவத்தில் நல்ல பண்புகளையும், உயர்ந்த எண்ணங்களையும் மாணவர்கள் கட்டமைத்து கொள்ள வேண்டும். தீய எண்ணங்களை வெல்லும் சக்தி இளைஞர்களுக்கு வேண்டும். சுயநலம் இன்றி, பொது நலத்துடன் உழைக்கும் போது உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும் என்றார்.
பட்டமளிப்பு விழா நிகழ்வுகளை முதல்வர் சங்கீதா துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகளில் தர வரிசை பெற்ற, 35 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ஆயிரம் இளநிலை பட்டதாரிகள், 209 முதுநிலை பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவில், கல்லூரியின் பொருளாளர் பரமசிவன், மாணவ மாணவியர்களின் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.