UPDATED : ஜூன் 15, 2024 12:00 AM
ADDED : ஜூன் 15, 2024 10:23 AM
கோவை :
செயல்படாமல் இருந்த அரசு நிதி உதவி பெறும் பள்ளியை, புனரமைத்து கொடுத்த மாநகராட்சி நிர்வாகத்துக்கு, பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.
கோவை சுகுணாபுரம் பகுதியில், அரசு நிதி உதவி பெறும் பெத்தேல் லிவிசி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வந்தனர்.
நாளடைவில், இப்பள்ளிக்கு வந்த மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்தது. இதனால், பள்ளி செயல்பட முடியாத நிலைக்கு சென்றது. இதையடுத்து மாணவர்கள், கல்வி பயில பல கி.மீ., பயணிக்க வேண்டி இருந்தது.
மாணவர்கள் பயன்பெற, இப்பள்ளியை புனரமைத்து தரவேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது. மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள இப்பள்ளியை புனரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. இதன்படி, பள்ளி புனரமைக்கப்பட்டது. மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.
நேற்று பள்ளி துவக்கி வைக்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் பள்ளியை துவக்கி வைத்து, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினர். பள்ளி மீண்டும் துவங்க காரணமாக இருந்த, மாநகராட்சி நிர்வாகத்துக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

