நீட் தேர்வு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு
நீட் தேர்வு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு
UPDATED : மே 30, 2024 12:00 AM
ADDED : மே 30, 2024 09:36 AM
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு பயிற்சியளித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இக்கல்வியாண்டில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், திருப்பூர், ஜெய்வாய்பாய் பள்ளி, கே.எஸ்.சி., அரசுப்பள்ளி, தாராபுரம் என்.சி.பி., பள்ளி, உடுமலை ஆர்.கே.ஆர். பள்ளி, பல்லடம் அரசு பெண்கள் பள்ளி என, ஐந்து மையங்களில், கடந்த மார்ச், 25ம் தேதி துவங்கி, கடந்த, 2ம் தேதி வரை நடந்தது.
திருப்பூர் மாவட்ட நீட் தேர்வு பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தலைமையில், 25 ஆசிரியர்கள் பயிற்சி வழங்கும் பணியில் ஈடுபட்டனர். 565 மாணவர்கள் பயிற்சி மேற்கொண்டனர். இவர்களுக்கான பாட புத்தகங்கள், வினாத்தாள், ஓ.எம்.ஆர்., தாள், பயிற்சி கையேடு மற்றும் உபகரணங்கள் ஆகியவை அரசு சார்பில் வழங்கப்பட்டன.
திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட, 5 மையங்களில், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.
கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்து, கல்வித்துறை அதிகாரிகள், நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளர் உட்பட பயிற்சி வழங்கிய ஆசிரியர்கள், நீட் தேர்வு மைய தலைமையாசிரியர்கள் உட்பட, 35 பேருக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம் மற்றும் புத்தகம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், சப்-கலெக்டர் சவுமியா, ஆர்.டி.ஓ., செந்திலரசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.