இந்திய வரைபடத்தில் முக்கிய இடம் பிடித்த குலசேகரப்பட்டினம்; இஸ்ரோ தலைவர்
இந்திய வரைபடத்தில் முக்கிய இடம் பிடித்த குலசேகரப்பட்டினம்; இஸ்ரோ தலைவர்
UPDATED : ஆக 28, 2025 12:00 AM
ADDED : ஆக 28, 2025 09:45 AM

தூத்துக்குடி:
இந்திய வரைபடத்தில் குலசேகரப்பட்டினம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவு தளத்திற்கு கடந்த பிப்ரவரி 28ம் தேதி 2024ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆறு மாத காலமாக ராக்கெட் ஏவுதளம் அமைக்க உள்ள இடத்தில் உள்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ராக்கெட் ஏவுதளத்திற்கான பூமி பூஜையை இஸ்ரோ தலைவர் நாராயணன் தொடங்கி வைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் நாராயணன் கூறியதாவது:
இந்திய விண்வெளி நாளில் மிக முக்கிய நாள். இங்கு 33 கட்டுமானங்கள் பணிகள் நடைபெற்று வருகின்றன. மிக முக்கியமானது. ராக்கெட் லாஞ்ச் செய்யப்படும் இடம் மற்றும் கட்டுமான பணிகள் இன்று 100 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் குலசேகரன்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும்.
இதற்கான இடம் வழங்கிய தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் நன்றி. ஸ்ரீஹரிகோட்டா பகுதியில் இருந்து 2 ராக்கெட் தளம் உள்ளது. மேலும் மூன்றாவதாக 4 ஆயிரம் கோடி மதிப்பில் அந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. வரும் மூன்று மாத காலத்திற்குள் ஒரு சிறிய ரக ராக்கெட் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இங்கிருந்து ஏவப்பட உள்ள ராக்கெட் சிறிய அளவிலான ராக்கெட் என்று நினைக்க வேண்டாம்.
500 கிலோ எடை கொண்ட ராக்கெட் விண்ணில் ஏவப்படும். இஸ்ரோவின் பணி கூட்டு முயற்சி. 20 பணியாளர்கள் இதற்கு பின்னால் உள்ளார்கள். தனியார் ராக்கெட்டுகளும் இங்கிருந்து ஏவப்படும். அடுத்த ஆண்டு டிசம்பருக்கு அனைத்து பணிகளும் நிறைவடையும். குலசேகரன்பட்டினம் இந்திய வரைபடத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இங்கிருந்து வருடத்துக்கு 25 ராக்கெட் வரை ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு நாராயணன் கூறினார்.