ஓணத்தில் மாணவர்கள் பங்கேற்பதை தடுத்த ஆசிரியைகள் சஸ்பெண்ட்
ஓணத்தில் மாணவர்கள் பங்கேற்பதை தடுத்த ஆசிரியைகள் சஸ்பெண்ட்
UPDATED : ஆக 28, 2025 12:00 AM
ADDED : ஆக 28, 2025 09:46 AM
திருச்சூர்:
கேரளாவில் தனியார் பள்ளியில் நடக்கும் ஓணம் பண்டிகையில் பங்கேற்க வேண்டாம் என முஸ்லிம் மாணவர்களின் பெற்றோருக்கு, 'வாட்ஸாப்' தகவல் அனுப்பிய இரு ஆசிரியைகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கேரளாவின் திருச்சூர் அருகே உள்ளது கடவல்லுார். இங்கு, 'சிராஜூல் உலுாம்' என்ற பெயரில் தனியார் ஆங்கில உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், பள்ளி மாணவர்களின் பெற்றோர் இடம் பெற்றுள்ள பெற்றோர் - ஆசிரியர் கழக 'வாட்ஸாப்' குழுவில், கதீஜா என்ற ஆசிரியை குரல் வழி தகவல் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
முஸ்லிம்களான நாம் இஸ்லாத்தை பின்பற்றி வாழ வேண்டும். ஓணம் கொண்டாட்டம் பல தெய்வ வழிபாட்டை கொண்டது. எனவே, அதை நாம் ஊக்குவிக்க கூடாது.
நாமோ, நம் குழந்தைகளோ இந்த விழாவில் பங்கேற்கக் கூடாது. நம் குழந்தைகள் இஸ்லாமிய கலாசாரத்திலேயே வளர்க்கப்பட வேண்டும்; பிற மத கலாசாரத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது பற்றி அறிந்த பள்ளி நிர்வாகம், இதில் தொடர்புடைய இரு ஆசிரியைகளை சஸ்பெண்ட் செய்துள்ளது.
இது குறித்து பள்ளி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், 'ஓணம் தொடர்பாக இரு ஆசிரியைகள் பேசியது அவர்களது தனிப்பட்ட கருத்து. ஓணம் கொண்டாட வேண்டாம் என கூறிய இரு ஆசிரியைகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கம் போல் இந்த ஆண்டும் ஓணம் விழாவை பள்ளியில் விமரிசையாக கொண்டாட நிர்வாகம் முடிவு செய்துள்ளது' என தெரிவித்துள்ளது. இதற்கிடையே, மத வெறுப்பை துாண்டியதாக இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பினர் அளித்த புகாரின்படி, ஆசிரியைகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.