UPDATED : பிப் 11, 2025 12:00 AM
ADDED : பிப் 11, 2025 10:15 AM

சென்னை:
பல ஆண்டுகளாக காலியாக உள்ள, 1,000க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்பக்கோரி, மருத்துவ கல்வி இயக்குநரகத்தை முற்றுகையிட்டு, லேப் டெக்னீஷியன்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரக அலுவலகத்தை, இரண்டாமாண்டு மருத்துவ ஆய்வக நுட்ப மாணவர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று முற்றுகையிட்டனர்.
அப்போது, அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக்கோரி, தங்களது சான்றிதழ்களை சாலையில் வீசினார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு கோஷம் எழுப்பியோரை, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதுகுறித்து, லேப் டெக்னீஷியன்கள் கூறியதாவது:
டி.எம்.எல்.டி., போன்ற மருத்துவ படிப்புகளை முடித்து பலர் காத்திருக்கிறோம். எனவே, அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, 1,000க்கும் மேற்பட்ட இடங்களில் எங்களை பணியமர்த்த வேண்டும் என்று, அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் பயனில்லை.
தற்போது போராட்டத்திற்கும் அனுமதி மறுத்து, எங்களை கைது செய்துள்ளனர். எங்களது நியாயமான கோரிக்கையான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். லேப் டெக்னீஷியன்களுக்கான தனி கவுன்சில் உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.