அங்கன்வாடிகளில் தரமான உணவு லட்சுமி ஹெப்பால்கர் உத்தரவு
அங்கன்வாடிகளில் தரமான உணவு லட்சுமி ஹெப்பால்கர் உத்தரவு
UPDATED : ஜூன் 24, 2024 12:00 AM
ADDED : ஜூன் 24, 2024 10:36 AM
பெங்களூரு:
அங்கன்வாடி மையங்களில், தரமான உணவு வழங்குவதில், தொய்வு ஏற்பட கூடாது. அலட்சியத்துடன் செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் எச்சரித்தார்.
அங்கன்வாடி மையங்களில், குழந்தைகள், தாய்மார்கள், கர்ப்பிணியருக்கு உணவு வழங்கப்படுகிறது. பல மையங்களில் தரமற்ற உணவு வழங்குவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்நிலையில், மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், பெங்களூரு விகாஸ் சவுதாவில், உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:
அங்கன்வாடி மையங்களுக்கு உணவுப் பொருட்கள் வினியோகம் செய்யும் குடோன்களுக்கு, உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். உணவின் தரத்தையும் பரிசோதிக்க வேண்டும்.
தரமான உணவு வழங்குவதில், தொய்வு ஏற்பட கூடாது. அலட்சியத்துடன் செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகமான குழந்தைகளை சேர்த்து கொள்ள வேண்டும். மழை காலம் என்பதால், அங்கன்வாடி மையங்களை சுற்றி வளர்ந்துள்ள புதர்கள், செடி கொடிகளை அகற்ற வேண்டும்.
தாலுகா, மாவட்ட, மாநில அளவிலான அதிகாரிகள் ஒன்றாக இணைந்து பணிபுரிய வேண்டும். ஊழியர்கள் பணி ஓய்வின் போது, கிராஜுவிட்டி தொகை கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட உள்ளது. மொத்தம் 2,537 பெண்களுக்கு, 29.91 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் குழந்தை திருமணங்களை தடுக்க வேண்டும். குழந்தை திருமணம் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.