குழந்தைகளுக்கு சமூக வலைதள கட்டுப்பாடு: அமெரிக்காவில் அதிரடி
குழந்தைகளுக்கு சமூக வலைதள கட்டுப்பாடு: அமெரிக்காவில் அதிரடி
UPDATED : ஜூன் 24, 2024 12:00 AM
ADDED : ஜூன் 24, 2024 10:34 AM

நியூயார்க்:
பள்ளியில் படிக்கும் மாணவர்கள், சமூக வலைதளங்களுக்கு அடிமையாக இருப்பதை தடுக்கும் நோக்கத்தோடு, அமெரிக்காவின் நியூயார்க் நகர நிர்வாகம் புதிய மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இதில் நியூயார்க் நகர கவர்னர் கோத்தி ஹோச்சல் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த மசோதாவின்படி, தங்களுடைய குழந்தைகள் என்னென்ன விஷயங்களை சமூக வலைதளங்களில் பார்க்கலாம், எந்த நேரத்தில் பார்க்கலாம் என்பதை நிர்ணயிக்கும் உரிமை பெற்றோருக்கு வழங்கப்படும்.
இதன் வாயிலாக தேவையில்லாத விஷயங்கள் அவர்கள் மீது திணிப்பதை தடுக்க முடியும். அதுபோல, 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்கள் சமூக வலைதளங்களில் பின்தொடரும் கணக்குகளில் இருந்து தணிக்கை செய்யப்பட்ட பதிவுகள் மட்டுமே பார்க்க அனுமதி வழங்கப்படும். பெற்றோரின் முன் அனுமதியுடன், எந்தெந்த விஷயங்களை தணிக்கை செய்வது என்பதை நிர்ணயிக்க இந்த மசோதா உதவும்.
இந்த மசோதாவை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான விதிகள், வழிமுறைகளை, சட்டத்துறை உருவாக்கும். அதன்பின், மற்றவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு, இது சட்டமாக அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, இது கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக எதிர்ப்பு குரலும் எழுந்துள்ளது. சமூக வலைதளங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க இந்த வழியைப் பின்பற்றுவதாகவும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
இதுபோல, கலிபோர்னியா கவர்னர் கேவின் நியூசம், பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போன்களை பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது தொடர்பாக, மசோதா தாக்கல் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக கூறியுள்ளார்.
நாடு முழுதும் இந்த விஷயத்தில் பொதுவான சட்டங்கள் இல்லை. மருத்துவம் தொடர்பாக அதிபருக்கு ஆலோசனை வழங்கும் சர்ஜன் ஜெனரல், சமீபத்தில் ஒரு ஆலோசனை வழங்கியிருந்தார். சிகரெட் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து, சிகரெட் பாக்கெட்களில் அச்சிடப்படுகிறது.
அதுபோன்று மொபைல்போன்கள், சமூக வலைதளங்களை அதிகளவு பயன்படுத்துவது குறித்த எச்சரிக்கை வாசகங்கள் வெளியிடுவது தொடர்பாக ஆலோசிக்கும்படி, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார் அவர்.