ஒவ்வொரு நாளும் புதியதை கற்றுக்கொள்ள வேண்டும்: மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி அறிவுரை
ஒவ்வொரு நாளும் புதியதை கற்றுக்கொள்ள வேண்டும்: மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி அறிவுரை
UPDATED : ஆக 17, 2026 10:43 AM
ADDED : ஆக 17, 2026 10:44 AM

சென்னை:
“தகவல் தொழில்நுட்பத் துறையை, செயற்கை நுண்ணறிவு ஆக்கிரமித்து வருகிறது. இதற்கு, மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் புதியதை கற்றுக் கொள்ள வேண்டும்,” என, துணை ஜனாதிபதி சி.பி.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையின், 22வது பட்டமளிப்பு விழா, செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துாரில் உள்ள பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. பல்கலை வேந்தர் பாரிவேந்தர் தலைமை வகித்தார்.
விழாவில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், 'மஹிந்திரா அண்டு மகேந்திரா லிமிடெட்' நிறுவனத்தின், 'ஆட்டோமேட்டிவ் பிசினஸ்' தலைவர் வேலுசாமிக்கு, கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் மாணவ, மாணவியருக்கு, பட்டங்களை வழங்கி பேசியதாவது:
இலவசமாக தடுப்பூசி
பட்டமளிப்பு விழா என்பது, வெறும் பட்டங்களை வழங்கும் நிகழ்ச்சி மட்டும் கிடையாது. இது, மாணவர்களின் பல ஆண்டு விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பை கொண்டாடும் தருணம்.
ஒழுக்கம் மற்றும் கற்றல் ஆகியவற்றுடன், பொறுப்பும், சமூக சேவையும் நிறைந்த வாழ்நாள் பயணத்தின் தொடக்கமாகவும், இது அமைகிறது. உங்கள் எதிர்கால முயற்சிகள் அனைத்திலும், வெற்றி பெற வாழ்த்துகள்.
இந்தியா மேற்கொள்ளும் ஆராய்ச்சிக்கு, இன்று உலகம் முழுதும் மிகுந்த மதிப்பு கிடைக்கிறது. கொரோனா நோய் தொற்று பரவல் காலத்தில், நாம் தடுப்பூசியை கண்டுபிடித்தோம். நம் தடுப்பூசி, உலகம் முழுதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நம் நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி, நுாற்றுக்கும் அதிகமான நாடுகளுக்கு, இலவசமாக தடுப்பூசி வழங்கப்பட்டது. இது தான், இந்தியாவின் சிறப்பு.
உலகம் நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கும் போது, நாம் நமது ஆராய்ச்சியை பணமாக்கிக் கொள்ள ஒரு போதும் நினைக்கவில்லை. சில நாட்களுக்கு முன், கென்யா நாட்டின் சபாநாயகர் என்னை சந்தித்தார். அப்போது, இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார்.
கொரோனா காலத்தில் மேற்கத்திய நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்த போது, கென்யா அவர்களை அணுகியதாகவும், அவர்கள் தடுப்பூசி தர மறுத்துவிட்டதாக தெரிவித்தார். அதே நேரம், மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியா, அவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கியது.
மோடி பிரதமாக பதவியேற்கும் போது, நம் நாட்டின் பொருளாதாரம், எந்த நிலையில் இருந்தது என்பதை அறிவோம். இப்போது, உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதாரம் மிக்க நாடாக, இந்தியா உருவெடுத்துள்ளது. மூன்றாவது பொருளாதாரம் மிக்க நாடாக மாறுவதை நோக்கி முன்னேறுகிறோம்.
மாணவர்கள், போதைப் பொருட்களில் இருந்து, எப்போதும் விலகி இருக்க வேண்டும். நம் மனதை கட்டுப்படுத்த வேண்டும். கல்வி வளாகங்களில், போதைப் பொருட்கள் புழங்குவது வேதனை தருகிறது.
தேசமே முதன்மை
தமிழகத்தில் ஒரு கல்வி நிறுவனத்தில், போதைப் பொருள் புழக்கம் தொடர்பாக தகவல் தெரிவித்த மாணவர், கல்வி நிறுவன வளாகத்திலேயே கொலை செய்யப்பட்டுள்ளார். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், தேசமே முதன்மை எனும் ஒரு வழிகாட்டும் கொள்கையை வைத்திருக்க வேண்டும்.
கடந்த ஆண்டு சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பாக இருந்த ஒன்று, இன்று காலாவதியாகி இருக்கும். செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்ப துறையை ஆக்கிரமித்து வருகிறது. இந்நிலையில், மாணவர்கள் தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும், புதியதை கற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, பல்கலை வளாகத்தில் உள்ள வேந்தர் அருங்காட்சியகத்தில், பாரிவேந்தரின் 32 அடி உயர சிலையை, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
விழாவில், தமிழக கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர், எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை வேந்தர்கள் சத்தியநாராயணன், ரவிபச்சமுத்து, பல்கலை துணைவேந்தர் முத்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
