UPDATED : செப் 27, 2026 02:33 PM
ADDED : செப் 27, 2026 02:35 PM
மாணவர்களுக்கு நுாலகம் என்பது பாடப்புத்தகங்களைத் தாண்டி அறிவைத் தேடிச் செல்லும் இடம். ஒரு நல்ல புத்தகம், பாடத்தில் புரியாத ஒரு கருத்தை எளிதாக்கலாம்; ஒரு வாழ்க்கை வரலாறு, புதிய கனவை உருவாக்கலாம்; ஒரு அறிவியல் நுால், “ஏன்?” என்ற கேள்வியை எழுப்பலாம். அதனால் பள்ளிப் பருவத்திலேயே நுாலகத்தைப் பயன்படுத்தும் பழக்கம் மாணவர்களின் சிந்தனை உலகத்தை விரிவுபடுத்துகிறது.
ஆனால் இன்றைய மாணவனின் நுாலகம் நான்கு சுவர்களுக்குள் மட்டுமே இருக்க வேண்டியதில்லை. இணையம், மின் நுால்கள், கல்வி இணையதளங்கள், மின்னிதழ்கள், காணொளிப் பாடங்கள், ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை ஒரே இடத்தில் அணுக உதவுவது டிஜிட்டல் நுாலகம். கணினி அல்லது கைப்பேசி மூலம், நேரம் மற்றும் இடத்தின் கட்டுப்பாடின்றி பல்வேறு தகவல்களைத் தேடிப் படிக்க முடியும்.
டிஜிட்டல் நுாலகத்தின் மிகப் பெரிய பயன், மாணவன் தனக்குத் தேவையான தகவலைத் தானாகத் தேடும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வது. ஒரு பாடத்தில் சந்தேகம் ஏற்பட்டால், ஆசிரியரிடம் கேட்பதோடு நிற்காமல், பல்வேறு ஆதாரங்களில் தேடி ஒப்பிட்டுப் பார்க்க முடியும். இதன் மூலம் “பதிலைப் பெறுவது” என்பதைக் கடந்து, “சரியான பதிலை எப்படித் தேடுவது?” என்ற திறன் உருவாகிறது.
ஆனால் டிஜிட்டல் உலகில் கிடைக்கும் ஒவ்வொரு தகவலும் சரியானது அல்ல. எனவே, நுாலகத்தைப் பயன்படுத்தும் மாணவன் நல்ல வாசகராக மட்டுமல்லாமல், நல்ல தகவல் தேடுபவராகவும் மாற வேண்டும். தகவலின் மூலத்தைப் பார்ப்பது, நம்பகமான ஆதாரத்தைத் தேர்ந்தெடுப்பது, படித்ததைச் சிந்தித்துப் புரிந்துகொள்வது ஆகியவை முக்கியமான திறன்கள்.
நுாலகம் காகிதத்திலிருந்து திரைக்கு மாறியிருக்கலாம்; ஆனால் அதன் நோக்கம் மாறவில்லை, மாணவனுக்குள் ஒரு புதிய கேள்வியை உருவாக்குவது. அச்சு நுாலகமும் டிஜிட்டல் நுாலகமும் ஒன்றுக்கொன்று போட்டியிடுபவை அல்ல. இரண்டையும் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்த மாணவனின் அறிவுலகம், அவன் வகுப்பறையைவிடப் பெரியதாகிவிடும்.
நுாலகப் படிப்புகள்
நுாலகம் என்பது புத்தகங்களைப் பாதுகாக்கும் இடம் மட்டுமல்ல. அவற்றைத் தேர்வு செய்வது, வகைப்படுத்துவது, தகவல்களைத் தேடிக் கண்டுபிடிப்பது, வாசகர்களுக்குத் தேவையான நூல்களை வழிகாட்டுவது போன்ற பணிகளைக் கற்றுத்தரும் கல்வியே நூலக அறிவியல். பிளஸ் 2 முடித்த பிறகு சில கல்வி நிறுவனங்களில் நுாலக அறிவியல் சார்ந்த அடிப்படைப் படிப்புகளில் சேரலாம்.
பட்டப்படிப்புக்குப் பிறகு நுாலக அறிவியலில் முதுநிலைப் படிப்பையும் தொடர முடியும். இத்துறையில் புத்தகங்களுடன், மின் நுால்கள், மின்னிதழ்கள், இணையத் தகவல்கள், தரவுத்தளங்கள் போன்ற டிஜிட்டல் வளங்களைப் பயன்படுத்தும் முறைகளும் கற்றுத்தரப்படுகின்றன. படிப்பை முடித்தவர்கள் பள்ளி, கல்லுாரி, பல்கலைக்கழகம், பொது நூலகம், ஆய்வு நிறுவனம், தகவல் மையம் போன்ற இடங்களில் பணியாற்றும் வாய்ப்புகளைப் பெறலாம்.
இன்றைய டிஜிட்டல் உலகில் தகவலைச் சரியாகத் தேடி, ஒழுங்குபடுத்தி, தேவையானவர்களிடம் கொண்டு சேர்க்கும் திறனும் இந்தத் துறையில் முக்கியமானதாகிறது.
நுாலகர் என்ன செய்வார்?
நுாலகர் என்ன செய்வார்? நுாலகர் என்றால் புத்தகம் கொடுத்து வாங்குபவர் மட்டுமல்ல! ஒரு மாணவன், “சுற்றுச்சூழல் பற்றிய புத்தகம் வேண்டும்” என்றால், ஆயிரக்கணக்கான நுால்களில் இருந்து சரியான புத்தகத்தைத் தேடி வழிகாட்டுவார். பழைய நுால்களைப் பாதுகாப்பார். புதிய நுால்களைத் தேர்வு செய்வார். டிஜிட்டல் தகவல்களையும் ஒழுங்குபடுத்துவார். சுருக்கமாகச் சொன்னால், நுாலகர் புத்தகங்களைக் காப்பவர் மட்டுமல்ல; அறிவைத் தேடிச் செல்லும் மாணவருக்கு வழிகாட்டும் “அறிவுப் பாதை காட்டி”.
